Monday 27 April 2015

இயற்கையின் சீதனம்...


Friday 24 April 2015

படிக்காத மனைவி. - பாகம் - 2 லஸன்யாவும் மோதிரமும்

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna). 

லஸன்யாவும் மோதிரமும் 



சுவீடனில் இரண்டாவது வருடத்திலிருந்து சொல்வியின் எண்ணங்கள் கதைகள் எல்லாமுமே திருமணம் திருமணத்தின் பின் என்பனவும் அருளானந்தனின் தம்பி தங்கை எப்படித் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்பனவுமாக இருந்தது.

ஒரு நாள் அதையும் கேட்டாள் சொல்வி.

"ஹேய் அருள்... உன்ர அம்மா அப்பா, தம்பி தங்கையெல்லாம் எப்பிடி..." என்று மிகுந்த ஏக்கத்துடன் கேட்டபடி சமையலறைக்கு வந்தாள் சொல்வி.

அந்த சமையலறை, இவர்களுக்கு மட்டும் தனியானதல்ல... அது அந்த தளத்திலிருக்கும் அறுவருக்குப் பொது. இவர்களிருவரோடு இன்னும் மூன்று ஆண் மாணவர்களும் ஒரு பெண் மாணவியும் அந்தச் சமையலறையைப் பகிர்ந்து கொள்ள வேணடும்.
ஒவ்வொரு அறையுடனும் கழிகலன் (Commode) நீர் விசிறியுடனான குளியல்க் கூடம் (Shower with Cabinet) முகம் கழுவுவதற்கென ஒரு கழுவு தொட்டி (Washing sink) என்பவற்றுடன் ஒரு ஒருசேர் குளியலறை இருக்கும்.
மாணவர்கள் இருப்பது, படுப்பது, படிப்பது, கும்மாளமடிப்பது, உடலுறவு கொள்வது, தொலைக்காட்சி பார்ப்பது எல்லாமுமே சற்று விசாலமான ஒரே ஒரு அறையில்த்தான்.

அந்தச் சமையலறையில் அருளானந்தனோடு அந்த தளத்தில்க் குடியிருக்கும் சுவீடன் நாட்டு பெண் மாணவியும் பாண் துண்டங்களுக்கு மேல் பாலாடைக்கட்டிகளை (Cheese slices) வைத்து சூழை (Oven) அடுப்பில் வைத்துச் சூடாக்கிக் கொண்டிருந்தாள்.

சமையலறையில் சத்தமாகக் கேட்டுக் கொண்டே வந்த சொல்வியைப் பார்த்துப் புன்னகை செய்தாள் அந்த சுவீடன் நாட்டு மாணவி.

"என்ன செய்யுறது... ஒருத்தரைக் காதலிச்சா... அவருடைய சொந்த பந்தங்கள் எப்பிடி இருப்பினம் எண்டு கேட்டு தெரிஞ்சுட்டா நல்லதுதானே..." என அந்த சுவீடன் நாட்டு மாணவியைப் பார்த்து சொல்லிக் கொண்டு அருளானந்தனின் கழுத்தைக் கைகளால் வளைத்து கன்னத்தில் ஒரு முத்தமிட்டாள் சொல்வி.

அந்த சுவீடன் நாட்டு மாணவியோ கண் ஜாடையால்

"இவரா... உன்ர... காதலன்..." எனக் கேட்டாள்.

சொல்வியும் தலையையசைத்து வலது கண்ணை மூடித்திறந்து ஆமோதித்தாள்.

அந்த சுவீடன் நாட்டு மாணவி அவசர அவசரமாக பாண் துண்டுகளை சற்றே உருகிய பாலடைக் கட்டித் துண்டுகளுடன் (Cheese slices) சூழையிலிருந்து எடுத்துக் கொண்டு சமையலறையை விட்டு நகர்ந்தாள்.

அவள் செல்லும் போது,
அருளானந்தன் பாராத வண்ணம், சொல்வியைப் பார்த்து தனது இடது கையைத் தூக்கி பெருவிரலையும் சுட்டு விரலையும் சேர்த்து ஒரு வட்டம் போலாக்கி மற்றைய மூன்று விரல்களையும் அடுக்காகவும் நேராகவும் வைத்து சொல்விக்குக் காட்டி
"நல்ல தெரிவு (Good choice)" என சத்தம் வரதா வாறு வாயால் சொன்னாள்.
"Thank you..." என அதே போல சொன்ன சொல்வி...

மீண்டும் அருளானந்தனை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு
"My would-be..." என்றாள்.

"என்ன..." எனத் திரும்பினான் அருளானந்தன்.

அப்போ, சுவீடன் நாட்டு மாணவி அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

"இங்கிதம் தெரிந்தவள்..." என்ற அருளானந்தன்.

தொடர்ந்து...

"என்ன சொன்னாய்..." என சொல்வியைக் கேட்டான்.

"உன்ர பெற்றோர், தம்பி, தங்கை எப்பிடி இருப்பினம் எண்டு கேட்டன்..." என்றாள் சொல்வி.

"அவயளுக்கு ரெண்டு கால், ரெண்டு கை, ஒரு தலை, ஒரு உடம்பு இருக்கும்... அதில்ல; இப்ப என்ன சொன்னனி..." என இரு கைகளாலும் சொல்வியின் இடுப்பைச் சுற்றி தன்னோடு அணைத்தபடி கேட்டான்.

"அதுவா... மொனிக்கா, அந்த சுவீடன் girl, சொன்னாள் நல்ல தெரிவு எண்டு... அதான் அவளுக்குத் Thank you... எண்டு சொல்லி my would-be எண்டன் " என சொல்வி சொன்ன போது,

அருளானந்தன் சிரித்தான்...

"ஏன் பிழையா..." என அங்கலாய்ப்புடன் கேட்டாள் சொல்வி.

"ம்... பிழைதான்..." எனச் சாதாரணமாகச் சொல்லி விட்டு (lasagne) லஸன்யாவை துண்டங்களாக வெட்டி கோப்பைகளில் எடுத்தான்.

அதிர்ந்து போய், ஸ்தம்பித்துப் போய் பேச்சில்லாமல் நின்றாள் சொல்வி...
சொல்வியின் விழி மடல்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.

கோப்பைகளோடு லஸன்யாவை எடுத்துக் கொண்டு திரும்பிய அருளானந்தன் சொல்வியைப் பார்த்து அதிர்ந்து போனான்.

"ஹே....ய்... என்ன நடந்தது ஏன் அழுகிறாய்..." எனக் கேட்டுக் கொண்டே கோப்பைகளை அங்கே இருந்த மேசைமேல் வைத்துவிட்டு, சொல்வியை இரு கைகளாலும் அணைத்தபடி

"அழாத... என்ன நடந்தது... அவள் ஏதாவது சொன்னவளே... இரு வாறன் மொனிக்கா உன்னைத் துவைக்கிறன் பார்..." என அனாவசியமாக அந்த சுவீடன் நாட்டு மாணவிமேல் ஆத்திரப்பட்டான் அருளானந்தன்.

அப்போது, தனது அழுகையை ஒருவாறு அடக்கி விம்மியவாறே,

"நீ என்னைக் காதலிக்கிறாயா... " எனக் கேட்டாள் சொல்வி...

அருளானந்தன், சொல்வியின் இடையிலிருந்த தன் இரு கைகளாலும் சொல்வியின் முகத்தை ஆதரவோடு பிடித்து கொண்டு, அவளது கண்களைப் பார்த்து,

"இதில என்ன சந்தேகம்... I love You... I love You... I love You..." எனப் பல முறை சொல்லிவிட்டு,

"நாங்கதானே நாலு பிள்ளையள் பெறப்போறம்... அதெல்லாம் நான்... என்ன... அந்த சுவீடன் காறியோடயா  பெறப்போறன்... ஹ...?" என்றான் அருளானந்தன்.

இப்போது சொல்வி, வழிந்த கண்ணீரோடு சோகமாக சிரித்தாள்.
பின்னர்,
அருளானந்தனின் இரு தோழ்களையும் பிடித்து இழுத்து அவனது உதடுகளில் ஒரு ஈர முத்தம் கொடுத்தாள்.

"உன்ர முத்தம் உப்புக் கரிக்குது..." என்றான் குறும்புடன் அருளானந்தன்.
அருளானந்தனின் தோழ்களில் இருந்த கைகளை எடுத்து, இரண்டு கைகளாலும் 'தும், தும், தும்' என அவன் மார்பில் குத்திவிட்டு;

"Stupid... that is my tears... (முட்டாள்... அது என்ர கண்ணீர்...)" என்று ஒரு சோகச் சிரிப்புடனே சொன்னாள்...

அருளானந்தன் அவளது கண்ணீரைத் துடைத்து விட்டு;

"இப்ப எதுக்கு இதெல்லாம்... எதுக்காக அழுதனி..." என ஆச்சரியத்தோடு கேட்டான் அருளானந்தன்.

"இல்ல... நீ என்ர would-be எண்டு நான் சொல்லேக்க  நீ 'அது பிழை' எண்டாய் அதுதான் எனக்கு உடனே அழுகை வந்துட்டுது... இவ்வளவு நாளும் என்னென்னெல்லாமோ கதைச்சம்... எப்பியெல்லாமோ பழகினம்... எங்கெயெல்லாமோ சுத்தினம்... அதெல்லாம் வெறும் உடலுறவுக்குத்தானோ... எண்டு நினைச்சன் உடனே அழுகை வந்துட்டுது..." என்றாள் மிகுந்த சோகத்தோடு.

"Oh... my God... இப்ப... நாங்க... போய்... லஸன்யாவைச் சாப்பிட்டுட்டு... எல்லாம் விளக்கமாய்ச் சொல்றன் வா..." என ஆதரவோடு ஒரு கோப்பையை அவளிடம் தந்துவிட்டு வலது கையால் அவளை அணைத்தபடி இடது கையில் மற்றைய கோப்பையுடன் அறைக்கு அவளை கூட்டி வந்தான்.

"அது சரி... எங்கே அந்த would-be எண்ட சொல்லை கேட்டனி... அல்லது..." என அருளானந்தன் முடிக்கு முன், இடை மறித்த சொல்வி;

"ஒரு இந்தியன் லவ் ஸ்ரோறி (Love story) வாசிச்சன். லைபிறறில (Library) இருந்த ஒரு மகஸீன்ல (magazine)அதிலதான்... " சொலவி தொடர விடாமல்

"ஐயோ... ஐயோ... சிலர் சரியான அர்த்தம் தெரியாம எல்லாம் எழுதி வைப்பாங்க... வா... எல்லாம் விளக்கமா சொல்றன்..." என்றபடி அவளுடன் நடந்தான் அருளானந்தன்.

அறைக்கு வந்த இருவரும், இரட்டைக் கட்டிலாக்க கூடிய அந்த சோபா (Sofa) வில் அமர்ந்து கோப்பைகளை எதிரே இருந்த கூடத்து மேசை (Coffee Table) மேல் வைத்து முள்ளுக் கரண்டிகளை எடுத்தார்கள்.

ஆனால், சொல்வி முள்ளுக்கரண்டியை கையில் பிடித்த வண்ணம் அருளானந்தனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அருளானந்தன் தனது கோப்பையில் இருந்த லஸன்யாவில் ஒரு சிறிய துண்டு வெட்டி எடுத்த பின், சொல்வியைப் பார்த்தான்.

"ஹேய்... என்ன... சாப்பிடாம என்னைப் பாத்துக் கொண்டிருக்கிறாய்...?" என்றவன், தனது முள்ளுக்கரண்டியில் இருந்த லஸன்யாவை அவளுக்கு நீட்டி...

"இந்தா சாப்பிடு... பிறகு எல்லாம் சொல்றன்..." என்றான்.

சொல்வியும் வாயை திறந்து அவன் கொடுத்த லஸன்யாவை அப்படியே வாங்கி மென்றாள்...
அந்த லஸன்யாத் துண்டை அவள் வாயில் வைத்த அருளானந்தன் சொல்வியைப் பார்த்துக்கொண்டிருந்தான்...

அப்போது,

"எங்ங... ஏகோ..." என வாய் நிறைய லஸன்யாவோடு சொற்களை இடறினாள் சொல்வி. அருளானந்தன் புன்னகையோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சொல்வி அருளானந்தனை வியப்புடனும் விழிகளை அகல விரித்து அச்சத்துடனும் பார்த்து விட்டு, தனது வலது கையின் பெருவிரலையும் சுட்டு விரலையும் தனது வாயுள் வைத்து கம்பியாலான ஒரு வளையத்தை வாயிலிருந்து எடுத்தவள், மிகுதி லஸன்யாவை வாயிலிருந்து காகிதக் கைக்குட்டையில் உமிழ்ந்து விட்டு,

"அருள்... என்ன இது..." என லஸன்யாவால் மூடியிருந்த வளையத்தை இன்னொரு காகிதக் கைக்குட்டையால் துடைத்தபடி கேட்டாள்.

அப்போது அருளானந்தன்  தனது இடது முழங்காலைத் தரையில் வைத்து, வலது முழங்காலை மடித்து சோபா முன்னே தரையில் இருந்து கொண்டு,
லஸன்யாவை அந்த வளையத்திலிருந்து துடைத்துக் கொண்டிருந்த சொல்வியின் இரண்டு கைகளையும் அவளது மார்புக்கு நேராக பிடித்து கொண்ட போது, சொல்வி அருளானந்தனைப் பார்த்தாள்.

"சொல்வி... நான் உன்னை இதயபூர்வமாகக் காதலிக்கிறன்... நீ இல்லாம... நான் இனி சந்தோஷத்தை நினைச்சும் பார்க்க முடியாது... என்னை நீ திருமணம் செய்து கொள்வாயா..." எனக் கேட்டு முடிப்பதற்குள்...

சொல்வியின் கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றாக கன்னத்தில் வழிய,
"Yes...Yes... Yes... I will marry you..." (ஓம்... ஓம்... ஓம்... நான் உன்னை திருமணம் செய்கிறேன்...) என்றாள் கண்களில் கண்ணீர் வழிந்தோட விம்மியபடியே.

அப்படியே சொல்வி முன்னே வந்து, அருளானந்தனைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டாள்.

பின்னர், எழுந்து குளியலறைக்கு ஓடினாள்...

"ஹேய்... எங்க போறாய்..." என்றான் அருளானந்தன்.
"நான் மோதிரத்தைக் கழுவிப் பாக்கப் போறன்..." என்றாள் சொல்வி குளியலறைக்கு ஓடிக்கொண்டு...

சொல்வி அந்த வைர மோதிரத்தை கழுவி எடுக்கையில், அருளானந்தன் அவள் பின்னால் வந்து அவளது இடையில் இரு கைகளையும் வைத்துப் பிடித்து அவளை திருப்பினான்...

அந்த மோதிரத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த சொல்வியின் நெற்றியில் முத்தமிட்ட அருளானந்தன்; அந்த மோதிரத்தை அவளிடமிருந்து வாங்கி அவளது வலது கையின் மோதிர விரலில் அணிந்தான்.

"நல்ல அளவாயிருக்கு... எப்பிடி... " என்ற சொல்வி திரும்பி கண்ணாடியில் தனது வலது கையின் பின்புறத்தை அந்த வைர மோதிரத்தோடு பார்த்து...

"Beautiful... So, beautiful... I love it... Thank you..." (அழகாகயிருக்கு... நல்ல அழகாகயிருக்கு... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... நன்றி...) என்ற படி திரும்பி அருளானந்தனைக் இறுகக் கட்டியணைத்து ஆழமாக முத்தமிட்டாள்...

பின்னர் இருவரும் சோபாவை அடைந்தபோது,

"அருள் எனக்கு... உடம்பெல்லாம் என்னவோ செய்யுது... எனக்குப் பசிக்கேல்ல..." என்றபடி அருளானந்தனின் மார்பில் சாய்ந்தாள் சொல்வி.
"ஹே... ய்...  இன்ப அதிர்ச்சியைத் தாங்க இயலாம உடம்பு தள்ளாடுது போல..." என்ற அருளனாந்தன், சொல்வியை இறுக அணைத்தான்...

சொல்வி அருளானந்தனின் மார்பில் முகத்தைப் புதைத்தபடி

"ம்... ம்..." என்றாள்.

சொல்வியின் முதுகை ஆதரவாகத் தடவி சொல்வியை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த அருளானந்தன்;

"ஹேய்... வெளில கொஞ்ச நேரம் நடந்து போயிட்டு வருவம்... அப்ப உனக்கு ஆறுதலா இருக்கும்..." எனச் சொல்லி சொல்வியின் தலையில் முத்தமிட்டான் அருளானந்தன்.

அதற்கும் சொல்வி,

"ம்... ம்... " என்றாளே தவிர அசையவில்லை.

"எழும்பு போய் முகத்தைக் கழுவியிட்டு வா... எழும்பு..." என்றான் அருளானந்தன்.
அப்போது சொல்வி ஒருவாறாக தலை நிமிர்த்தி அருளானந்தனைப் பார்த்தாள்; பின்னர் தனது வலது கையை எடுத்த அவன் மார்பில் வைத்து அந்த மோதிரத்தைப் பார்த்து, பின்னர் அருளானந்தனைப் பார்க்க; அருளானந்தன் சொல்வியைப் பார்த்துச் சிரித்தான்.

"Thank You..." என்றவள், அருளானந்தனின் முத்தத்தை எதிர்பார்த்து சிறிது முகத்தை மேலே உயர்த்த, அதையுணர்ந்த அருளானந்தன் குனிந்த அவளை ஒரு குழந்தையை அணைப்பது போல அணைத்து, அவளது ரோஜாப் பூ நிற உதடுகளில் கனிவான ஒரு முத்தம் தந்தான்.

சொல்வியும் அருளானந்தனும் வெளியே அந்த விடுதிப் புல் வெளியில் இள மாலை நிலவொளியில் ஒருவரை ஒருவர் அணைத்தபடி நடந்தனர்.

அந்த நிலவொளியில் தனது வலது கையை உயர்த்தி அந்த மோதிரத்தைப் பார்த்து;

"Beauuuuutiful... I looooove it... (அழகாகாகாகா இருக்கு... எனக்கு ரொம்ம்ம்ப பிடிச்சிருக்கு...)" என்ற சொல்வி நடந்து கொண்டே அருளானந்தனை அணைத்து முத்தமிட்டாள்...

"ஹெய்... அருள்... Sri Lanka வில... எப்பிடி என்கேஜ்மென்ற் engagement (நிட்சயதார்த்தம்) செய்வீங்க..." எனக் கேட்டாள் சொல்வி.

"பொதுவா அப்பா அம்மா பார்க்கிறது நிட்சயம் செய்யிறதுதான் வழமை... ஆனா ரெண்டு பேர் காதலிச்சாலும்... முறையோட போய் நிட்சயம் பண்ணுவினம்... மோதிரம் போடுறது... றிஜிஸ்ரர் (பதிவு - Register) செய்யிற நேரம்... அதுக்குப் பிறகு கலியாணம் செய்யேக்க பொம்பிளைக்கு தாலியை மாப்பிள கட்டுவார்..."
என்ற அருளானந்தன் தொடர்ந்து,

"இப்ப நீ சொல்லலாம் நான் உன்ர would-be எண்டு என்கேஜ்மென்ருக்கு முதல் would-be எண்டு சொல்றேல்ல... ..."

"ஓ... அதாலதான் பிழையெண்டு சொன்னியா..." என்றவள் தொடர்ந்து

"நானும் தாலி கட்டலாமா..." என ஆசையுடன் அருளானந்தனைப் பார்த்துக் கேட்டாள் சொல்வி.

"கட்டாயமெண்டில்ல... உனக்கு விருப்மெண்டா நான் கட்டிவிடுறன்..." எனச் சிரித்தபடி சொன்னான்.

"எனக்குத் தமிழ் முறைப்படி கலியாணம் கட்ட விருப்பம் சாறி கட்டி, தலை நிறைய பூ வைச்சு, நிறைய நகையள் போட்டு..." என மிகுந்த ஆசையுடன் சொல்வி தொடர இடைமறித்த அருளானந்தன்...

"தமிழ்க்கலியாணம் எங்கே பாத்தனீ...?" என்றான் ஆச்சர்யத்துடன்.

"ஒரு இந்தியப் படத்தில... So... Beautiful wedding ceremony (நல்ல அழகான திருமண வைபவம்)" என்றாள் சொல்வி

"அப்ப உன்ர அப்பா அம்மா அத விரும்புவினமா..." என்றான் அருளானந்தன்.
"அதுதான் தெரியேல்ல... ஒரு மாதிரி கதைச்சுப்பாப்பம்..." என மிகுந்த ஆதங்கத்துடன் சொன்னாள்.

"ஹேய்... I have an idea (எனக்கொரு யோசனை வருது...) நாங்கள் Sri Lanka வில ரெண்டு கலியாணம் ரெண்டு நாள் செய்வம்... ஒண்டைச் சொல்லுவம் றிஜிஸ்ரர் மரீஜ் (register marriage) எண்டு... மற்றதைச் சொல்லுவம் சடங்கு கல்யாணமெண்டு... அதையே... உன்ர அப்பா அம்மாவுக்காக சேர்ச் (Church) இலயும்... உன்ர ஆசைக்கு ஒரு தமிழ்க் கல்யாணம் ஒரு ஹோல் இலயும் செய்தா என்ன... எப்பிடி என்ர ஐடியா..." என்றான் அருளானந்தன் மிகுந்த துள்ளலுடன்...

"Really... " என ஆச்சர்யபட்டாள் சொல்வி.

"ஏன் அது... அப்பிடி ரெண்டு கலியாணம்... எனக்கு விளங்கேல்ல...?" என ஆர்வத்துடன் கேட்டாள் சொல்வி.

"எங்கட கலாச்சார முறைப்படி ஒரு கலியாணம்தான். ஐயர் மந்திரம் சொல்லி... மணவறையில தாலி கட்டுறது. ஆனா, இங்லிஷ் (English) காரன் வந்திருக்கேக்க; கவண்மென்ரிலயும் பதிய வேணும் எண்டுட்டான். இங்லிஷ் காரன் எங்கட மரபுக் கல்யாணத்தை ஏற்றுக் கொள்ளேலாது எண்டுட்டான்... அது அப்பிடியே தொடர்ந்து வந்து... இப்ப அதுக்குப் பேர் றிஜிஸ்ரர் மரீஜ் (Register Marriage) எண்டு அதையும் எங்கட கல்யாணத்தில ஒரு அங்கமா சேத்திருக்கினம்..." என அருளானந்தன் தொடருமுன்.

"அது, இப்ப எனக்கு நல்ல வசதியாப் போச்சு..." என்றாள் சொல்வி

"ம்... உன்ர ஆசையை நல்ல வடிவா செய்து முடிக்கிறன் போதுமே...?" என்றபடி சொல்வியை இறுக அணைத்தபடி சொல்வியோடு நடந்தான் அருளானந்தன்.

"அப்ப உனக்கு எண்டு ஒரு ஆசை இல்லையா... கலியாணத்தில... இப்பிடிச் செய்ய வேணும்... இப்படி அலங்கரிக்க வேணும் எண்டெல்லாம்... ஆசை இல்லையா... " என அருளானந்தனைப் பார்த்துக் கேட்டாள் சொல்வி.

அருளானந்தன் சொல்வியை நிறுத்தி இறுக அணைத்து, அவளது கண்களைப் பார்த்து,

"என்ர ஆசையெல்லாம் நீ என்னோடையே இருக்க வேணும்... எண்டதுதான்... அது போதும்..." எனச் சொல்லி சொல்வியை ஆழமாக முத்தமிட்டான்.



தொடரும்...

இந்தக் கதையின் முதலாவது பாகத்தை வாசிப்பதற்கு இணைப்பு கீழே...

Wednesday 15 April 2015

படிக்காத மனைவி. - பாகம் - 1 நட்பும் காதலும்

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

சம்பவம் என்னவோ முழுக்க முழுக்க உண்மை; ஆனால், பெயர்கள், வயதுகள், இடங்கள், சம்பவம் நடந்த காலகட்டம், உப பாத்திர சொருகல்கள் எல்லாம் எனது கற்பனை...
முதலில் அருளானந்தனின் ஆரம்பகால வாழ்க்கை; நோர்வேயிலும் சுவீடனிலும் எப்படி இருந்தது எனச் சொல்கிறேன்... அதைச் சொன்னால்த்தான் அருளானந்தனின் மன நிலை எப்படி இருந்தது என அறிந்து கொள்ளமுடியும்.



நட்பும் காதலும்.



அருளானந்தன் தனது இருபதாவது வயதில் நோர்வேயிற்கு மேற்படிப்புக்காக எழுபத்தெட்டாம் ஆண்டு வந்தவன்.

நான்கு வருட பல்கலைக்கழகப் படிப்பு முடித்த பின், சுவீடன் நாட்டு பல்கலைக் - கழகங்களில் ஒன்று அருளானந்தனை ஆராய்ச்சிப் படிப்பிற்காக அழைத்தது. இரண்டு வருடப் படிப்பு நான்கு வருடங்களானது. கலைமானிப் பட்டமும் பெற்றுக் கொண்டான்.

அவனது படிப்பில் முதலில் அவனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna). ஹன்னாவை அருளானந்தனுக்கு அவ்வளாகப் பிடிப்பதில்லை. காரணம் அவளது பொறுப்பின்மை, குடிப்பழக்கம், படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என காரணங்களுக்குக் குறைவில்லை.

அருளானந்தனுக்கு சொல்வியை பிடித்ததற்கு இன்னும் ஒரு காரணம்...
சொல்வி என்ற பெயர் ஓரளவிற்கு செல்வி என்ற தமிழ்ப் பெயருடன் ஒத்திருந்ததும்.

ஆக, ஒருநாள் அவளிடமே அவளது பெயருக்கு என்ன பொருள் எனக்- கேட்டுவிட்டான்.
"சொல்வி என்றால் காடு!! " என்றுவிட்டு அருளானந்தனைப் பார்த்தாள். 

"ஹா... " என வாயை விரித்து ஆச்சரியத்துடன் பார்த்தான்.

சொல்வியும் ஹன்னாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அருளானந்தனுக்கு ஏன் கேட்டோம் என்றாகி விட்டது...
பின்னர் சொல்வியே சொன்னாள்.

"காடும் ஒரு பொருள்... ஆனால் வெள்ளி என்பதும் ஒரு பொருள்..." என்று அவள் சொன்ன போது,

"ஓ... யா... சொல்வ் என்றால் வெள்ளி... " என வியந்தான் அருளானந்தன்.

"நான் கருவானது அம்மாவும் அப்பாவும் காட்டில் இருக்கும் எங்களது விடுமுறை குடிசைக்கு (cottage) சென்ற நேரம்... ஆக, அதுவும் எனக்குப் பொருந்தும்..." என்றாள்.

"தமிழில் செல்வி எனப் பெயருள்ளது... அதனால்த்தான் கேட்டேன்..." என்று அருளனாந்தன் சொன்ன போது;

அந்த இரு பெண்களுமே
"ஓ... அதனர்த்தம் என்ன" என ஆச்சர்யத்தோடு கேட்டார்கள்.

"செல்வி என்றால் பல அர்த்தங்களுண்டு. திருமணமாகத பெண்ணைச் சுட்டும் பெயர்... அதாவது உதாரணமாக செல்வி ஹன்னா என்பது போல... அடுத்து மகிழ்ச்சி, சந்தோஷம், வளமான, என்பவற்றோடு மகள் என்றும் பொருள்..." என்றான் அருளானந்தன்...

"அப்படியானால்... திருமணமான பின் பெயர் மாற்ற வேண்டுமா அது சிக்கலல்லவோ??" எனக் கேட்டாள் ஹன்னா.

"இல்லை... ஒரு பெண்ணின் பெயர் செல்வி என்றால்... அவள் திருமணமான பின் அவளது சுட்டுப் பெயர் திருமதி என மாறும்... இங்கே (f)ப்றோ(ø)க்கன் (frøken) என திருமணமாகாத பெண்ணையும் (f)ப்றுஎ (Frue) எனத் திருமணமான பெண்ணையும் சுட்டுப் பெயர்களால் அழைப்பதில்லையா... அது போல... ஆனல் செல்வி என்ற அவளது இடு பெயர் மாறாது..." என விளக்கினான் அருளானந்தன்.

பாரபட்சம் காட்டாமல்,

"ஹன்னா என்றால் என்ன பொருள்... " எனக் கேட்டான் அருளானந்தன்.

"ஹன்னா ஹீப்ரூ இலிருந்து வந்தது... கடவுள் கிருபை என்பததர்த்தம்..." என்றாள் ஹன்னா.

"அருளானந்தன் என்றால் என்ன அர்த்தம்? " சொல்வி கேட்டாள்
"அருள் என்றால்... Blessing of God கடவுளின் ஆசி... ஆனந்தன் என்றால்... மகிழ்ச்சியானவன்... ஆக, அருளானந்தன் என்றால் கடவுளின் ஆசியால் மகிழ்ச்சியாய் இருப்பவன் என்பதர்த்தம்" என்று அருளானந்தன் சொல்லி முடிக்கையில்...

"Of cours you are... (நிட்சயமாக அது போலவே இருக்கிறாய்...)" என்றாள் சொல்வி.

"Thank You..."என நன்றி தெரிவித்தான் அருளானந்தன்.


சொல்வி என்ற பெயர் செல்வி என்ற தமிழ்ப் பெயரை ஒத்ததாக இருந்தால், அருளானந்தனுக்கு அந்தப் பெயரும் வெகுவாகப் பிடித்திருந்தது.

ஹன்னாவினுடைய தந்தை தனது நிறுவனத்தில் மூவருக்கும் வேலை தருவதாச்சொன்னார். ஆனால் அருளானந்தன் கலைமானிப் பட்டப் படிப்பைத் தொடரத் தீர்மானித்து, ஹன்னா வின் தந்தையினது அழைப்பை நிராகரித்தான்.

அதேபோல, சொல்வியும் ஹன்னாவினுடைய தந்தையின் அழைப்பை ஏற்றுக் கொள்ளாது, பட்டப் படிப்பை அருளானந்தனோடு பயில விரும்பினாள். சுவீடன் நாட்டு அந்தப் பல்கலைக்கழகமும் இருவரையும் அனுமதி தந்து வரவேற்றது.

சொல்வி அருளானந்தனோடு கலைமானிப் பட்டப்படிப்பைத் தொடர அவனோடு சுவீடன் வந்தது; அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இருவரும் ஒரே மாடியில் ஒரே தளத்தில் பக்கம் பக்கமான அறைகளில் தங்கியிருந்து படித்தார்கள்.

இவர்கள் இருவருக்குள்ளும் மிக இறுக்கமான பிணைப்பு ஏற்பட்டது. ஏன் அப்படியெல்லாம் சுற்றி வளைக்க வேண்டும்... இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள்.

-- இங்கே காதல் அல்லது திருமணம் என்ற பந்தங்கள் இல்லாமலே பாலியல் உறவை ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வைத்துக் கொள்ளலாம். தவறே இல்லை.  இன்றைய இளைஞர் கட்சிப் பேச்சாளர்; கலவியியல்க் கல்வி நோர்வே நாட்டின் பாடத்திட்டத்தில் செய்முறைப் பயிற்சியோடு உள்ளடக்கப் பட வேண்டும் எனக் கூறியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆக, அருளானந்தனும் சொல்வியும் உடலுறவு கொள்வது, விடுமுறை காலங்களில் இடங்கள் சுற்றிப் பார்ப்பது என அவர்களது நான்கு வருட கலைமானிப் படிப்புக் காலமும் மிக இனிமையாகக் கழிந்தது. அவர்களிருவருக்கும் பொதுவான விடயங்கள் என்றால்; கல்வியிலிருந்து கலவி உட்பட எல்லாமுமே...

ஒரு நாள் சொல்வி அதையும் அருளானந்தனிடம் சொன்னாள்.
"ஹெய்... எனக்கு பிடிச்சதெல்லாம் உனக்கும் பிடிச்சிருக்கு... உனக்கு பிடிச்சதெல்லாம் எனக்கும் பிடிச்சிருக்கு... எங்கள் இரண்டு பேரையும் சொர்க்கத்திலயே சேர்த்து வைக்க முடிவு செய்திருக்கு போல...'match made in heaven'" என்று சொல்வி சொல்ல;

"எனக்கு கார உணவு பிடிக்கும்... உன்னால் அதை உண்ண முடியாதே..." என பதில் சொன்னான் அருளானந்தன்.

"எனக்கு பிடிக்காதெண்டு நான் சொல்லேல்லயே... நீ கொஞ்சம் உறைப்பை குறைச்சு கறி சமைச்சா நானும் 'enjoy' பண்ணுவன்..." எனக் கூறி அவன் மடியிலமர்ந்து செல்லமாக அவன் கன்னத்தில் கிள்ளி விட்டு உதடுகளில் முத்தமிட்டாள்.

ஹன்னாவின் குறுக்கீடு இல்லாமல் இருவரும் சுவீடன் வந்தபோதே அவர்களுக்குள் காதல் வளர ஆரம்பித்தது. நோர்வேயில் இருந்தபோது, இருவரிடமும் ஒரு ஈர்ப்பு இருந்தது, என்னவோ உண்மை.

சுவீடனில் இருவரும் தனித்தனி அறை விலாசங்கள் வைத்திருந்தாலும், சொல்வி, அருளானந்தனின் அறையில்த்தான் எல்லாமுமே.
உண்பது, உறங்குவது, உடலுறவு கொள்வது, தொலைக்காட்சி பார்ப்பது, படிப்பது எல்லாம்.

ஒரு நாள் குழந்தைகள் காப்பகங்களைப் பற்றிய ஒரு விவரணம் தொலைக்காட்சியில் காண்பித்தார்கள். அப்போது, ஒரு ஆபிரிக்க - சுவீடன் குழந்தையைக் காட்டினார்கள். அதைக் கண்டவுடன் சொல்வி,

"மிக அழகான குழந்தை என்ன..." என்று விட்டு உடனேயே

"எனக்கும் உனக்கும் குழந்தைகள் பிறந்தால் இப்படி அழகாகவும் அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள் இல்லையா..." என அருளானந்தனின் மார்பில் சாய்ந்திருந்து தொலைகாட்சி பார்த்த சொல்வி தலை நிமிர்த்தி அருளானந்தனைப் பார்த்துக் கேட்டாள்.

அருளானந்தன், சொல்வியின் முகத்தை இரு கைகளாலும் அள்ளியெடுத்து கனிவான ஒரு முத்தம் அவளது உதடுகளில் பதித்தான். பின்னர்

"நானும் அதைத்தான் யோசிச்சனான்..." என்ற அருளானந்தன்,

"அது சரி... குழந்தைகள் என்றால்... எத்தனை குழந்தைகள் பெறப் போகிறோம்?" என அருளானந்தான் சொல்வியை இழுத்து மடியில் படுக்க வைத்துக் கேட்டான்.

நிமிர்ந்து அருளானந்தனின் மடியில் படுத்திருந்த சொல்வி, அருளானந்தனை பார்த்து, வலது கையில் பெரு விரலை மடித்துக் கொண்டு மிகுதி நான்கு விரல்களையும் விரித்துக் காட்டி விட்டு நாணம் மேலிட, சொல்வியின் முகமும் குங்குமாகச் சிவக்க இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டாள்.

"ஹேய்... உன்ர உடம்பு தாங்காது... ரெண்டு போதும்..." எனச் சொல்லிய படியே அவளது இரு கைகளையும் எடுத்து அவற்றிற்கு முத்தங் கொடுத்தான் அருளானந்தன்.

"ஊகும்... அதெல்லாம் முடியாது... ரெண்டு ஆணும் ரெண்டு பெண்ணும்... " எனச் சொல்லி விட்டு, நாணம் இரத்தச் சிவப்பை சொல்வியின் முகத்தில் பூச, உடனேயே திரும்பி அருளானந்தனின் அடி வயிற்றில் முகத்தைப் புதைத்துக் கொணடாள் சொல்வி...

அருளானந்தன், சொல்வியின் தங்க நிறத் தலை மயிர்களை விரல்களால்க் கோதிவிட்ட படி,
"உனக்கு விருப்பமெண்டா... எனக்கும் விருப்பம்தான்... எனக்கென்ன விதைக்கிற மட்டுந்தானே... சுமக்கிறது... அறுவடை செய்யிறது... பிள்ளயளை நல்ல பிள்ளயளா வளர்க்கிறது... எல்லாம் உன் பொறுப்பு..." என்று சொல்லி சொல்வியின் சிவந்த கன்னத்தில் முத்தமிட்டான்.

உடனே சொல்வி எழுந்து, அருளானந்தனைப் பார்த்து;
"அப்பா ஸ்தானத்தில இருந்து என்ன செய்ய வேணுமோ அவ்வளவும் நீ தான் செய்ய வேணும்... இது Sri Lanka இல்ல..." என அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டு, அருளானந்தனைப் பார்த்தாள்.

"நீ என்னென்ன சொல்றியோ அதெல்லாம் நான் செய்யிறன்..." எனச் சொல்லிவிட்டு, சொல்வியை இறுக அணைத்து ஆழமாக முத்தமிட்டான் அருளானந்தன்.



தொடரும்...

Tuesday 14 April 2015