Friday 30 July 2010

மொழியும் நானும் - 2 - கோழி வாங்கப்போனவர்...

ஆங்கிலம் தெரிந்தாலும் சில பொருட்களை இங்கே கொள்வனவு செய்வதென்றால் இந்நாட்டு மொழி; நோர்வேஜிய மொழி சிறிதளவாவது தெரிந்திருக்க வேண்டும்.

நல்லவேளை நோர்வேஜியர்கள் மொழி தெரியதவர் ஒருவர் தவறாக எதுவும்  கூறிவிட்டால் அதை மன்னிப்பது மட்டுமல்ல உடனேயே மறந்தும் விடுவார்கள்.

முதலில் ஒரு தமிழ் பெண் என்ன செய்தாள், என்பதைக் கூறிவிடுகிறேன்.
ஏதோ ஒரு தமிழ்ப்படம் நிறைவுற்ற பின், நன்கு மொழி தெரிந்த பல தமிழ்ப்பெண்கள் கூட்டமாக வெளியே தத்தம் கணவர்மாருக்காக காத்திருந்தனர். கணவர்மார் வாகனத்தரிப்பிடத்திலிருந்து தத்தம் வாகனங்களை எடுத்து வரச் சென்றிருந்தனர்.
இந்த நேரம் ஒரு நோர்வேஜியர் ஒரு வைபவத்தில்க் கலந்துகொள்ள அந்த வழியே வந்தார்.

(அமெரிக்காவில் அல்லது மேலைத்தேச நாடுகளில் அனேகமாக துணையில்லாமல் ஒரு வைபவத்திற்குச் செல்லமாட்டார்கள். இதெற்கென்றே நிறுவனங்கள்கூட உள்ளது. அவரவர் தேவைக்கேற்ப பெண்களையோ அல்லது ஆண்களையோ சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுப்பி வைக்கும். ஆனால் நிறையவே செலவாகும். இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தெரிந்தவர்கள் யாரையாவது கேட்பார்கள். அப்படியும் யாரும் கிடைக்கவில்லையென்றால் மதுபானங்கள் விற்குமிடங்களில் யாரையாவது கேட்பார்கள்.)

அங்கே வந்தவர் அழகழகான பெண்கள்;  சேலை, சுடிதார், சல்வார் கமீ்ஸ் என அழகழகான    இந்திய உடைகளில்     கூட்டமாக நிற்பதைக் கண்டதும், தனது எண்ணத்தை அங்கே நின்ற ஒரு அழகான தமிழ்ப் பெண்ணிடம் தெரிவிக்க அந்தத்தமிழ்ப்பெண் மறுத்ததுமட்டுமல்லாமல் அழத்தொடங்கிவிட்டாராம். அந்த இரவு முழுவதும் அந்தத் தமிழ்ப் பெண் தன் கணவர் நேரத்திற்கு வாகனத்தை கொணர்ந்திருந்தால் அந்த நோர்வேஜியன் அப்படிக் கேட்டிருக்க மாட்டான் எனச் சொல்லி அவளது கணவரையும்   வைது, அழுதுகொண்டிருந்தாராம்.

இனி நான் சொல்ல வந்த நகைச் சுவைச் சம்பவத்தைச் சொல்கிறேன்...

புதிதாக ஒருவர் நோர்வேயிற்கு வந்திருந்தார். அவர் அவரது நண்பரது அறையில் தங்கியிருந்தார்.
ஒருநாள் அவர்கள் கோழிக்கறி சமைக்க முற்பட்டார்கள். அதற்கு கோழி வாங்குவதற்கு அந்தப் புதிதாக வந்த நண்பரை கடைக்குச் செல்லுமாறு சொன்னார். புதிதாக வந்தவருக்கு ஓரளவு ஆங்கிலம் தெரியும். ஆகவே அவர் தைரியமாக கடைக்குச் சென்றார்.

இங்கே முட்டைக்கோழி அல்லது இறைச்சிக்கோழியை உயிரோடு வாங்க முடியாது. அப்படி வாங்குவதானால் கோழிப்பண்ணைக்குத்தான் செல்ல வேண்டும். கோழிகளின் தலைகளை வெட்டி, குடல், சிறகு போன்றவற்றை அகற்றி பொதியில அடைத்து அதி குளிரூட்டியில் வைத்திருப்பார்கள். நாங்கள் அதைச் சிறிது இழக வைத்த பின்  தோலை உரித்து, வெட்டிக் கறி சமைப்போம்.

கடைக்குச் சென்ற புதிதாக வந்த நம் தமிழர், அதி குளிரூட்டியில் கோழியை கண்டெடுக்க முடியவில்லை.
ஆக, அருகில் நின்ற அழகான நோர்வே நாட்டு இளம் பெண்ணிடம் அவரது நண்பர் சொல்லிக் கொடுத்த அதே வசனத்தை அப்படியே ஒப்பித்தார்.
அதை அப்படியே இங்கே எழுதுகிறேன்.

" Jeg vil ha kone..." "kan du hjelpe meg?"

தமிழாக்கம்:

"எனக்கு மனைவி வேண்டும்..." "நீ எனக்கு உதவி செய்வாயா?"

“யெய் வில் ஹா கோனெ...” “கான் டு யெல்ப்ப மெய்?” என்றுதான் அந்தத்தமிழர் கூறினார்.
 
இதை அந்த நோர்வே நாட்டு இளம் பெண் மட்டுமல்ல அனைவரும் புரிந்து கொண்ட விதம்: “யெய் வில் ஹா கூனெ” என்றே...

அந்த இளம் நோர்வே நாட்டுப் பெண் அதிர்ந்து போய் அந்தத் தமிழரைப்பார்த்து "என்ன" என்றாள்.

அந்தத்தமிழரோ அதே வசனங்களை அப்படியே கூறினார்,  இப்போது அந்த அதி குளிரூட்டியைக் காட்டியபடி.
அந்தப் பெண்ணுக்கு ஒன்றுமட்டும் விளங்கியது அது: அந்தத்தமிழர் தன்னைப் பெண் கேட்கவில்லை என்பது.

உடனே கடையில் வேலை செய்வோரிடம் “இவன் ஏதோ கேட்கிறான்” எனக் கூறி கடையில் வேலை செய்பவரிடம் அந்தத்தமிழரை ஒப்படைத்து விட்டாள் அந்த நோர்வே நாட்டு இளம் பெண்.

இதே இடத்தில் ஒரு தமிழ்ப்பெண் என்ன செய்திருப்பாள் என யோசித்துப் பாருங்கள்.

அந்தத்தமிழரோ  அதே வசனங்களை கடையில் வேலை செய்வோரிடமும் ஒப்பித்தார்.
கடையில் வேலை செய்வோர் தலையைச் சொறிந்து கொண்டனர்.

புதிதாக வந்த அந்தத் தமிழருக்கு தான் சொல்வதில் ஏதோ பிழையிருக்கிறது எனப் புரிந்து கொண்டார்.

வேறு வழி என யோசித்த அந்தத்தமிழர், கோழியைப் போல கொக்கரித்து கைகளை மடக்கி கோழி சிறகடிப்பது போல செய்தாராம். அதன் பின்னர்தான் கடையிலிருந்தோருக்கு அந்தத்தமிழர் கோழி வாங்க வந்திருக்கிறார் என்பது ஓரளவிற்கு விளங்கியது.

கோழியை எடுத்துக் கொடுத்து உதவி செய்தனராம்.

கோழிக்கு நோர்வேஜிய மொழியில் 'HØNE' என்பதாகும்.  தமிழில் ஓரளவிற்கு அதை எழுத்தில் ‘ஹோனெ’ என எழுதலாம், ஆனால் அது முழுமையான உச்சரிப்பைத் தராது. ஆங்கில உயிரெழுத்தான ‘O’ வை வெட்டியிருப்பது போல ஒரு உயிரெழுத்துள்ளது. இதன் உச்சரிப்பு: ‘ஓ’ எனச்சொல்லும் போது நாக்கை (சிறிதளவு வெளியே) கீழுதட்டின் உள் விழிம்பில்    வைத்துக் கொண்டால்  எப்படிச்சப்தம் வருமோ அதுதான் அந்த உயிரெழுத்தின்  சப்தமாகும்.

சரி இதற்கும் மனைவிக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்கிறீர்களா...
சொல்கிறேன்.
நோர்வேஜிய மொழியில் 'KONE'  (‘கூனெ’) என்றால் மனைவி என்றர்த்தம்.
ஆங்கில அகரவரிசையில் ‘O’என்பதற்கு நோர்வேஜிய அகரவரிசையின் ஓசை ‘ஊ’ என்பதாகும் ஆனால் எழுத்து மாறாது.

ஆனால் உதரணமாக தமிழ் தெரியாத ஒருவர் ‘தமில்’ என்று சொன்னால் நாம் அதை தமிழ் என திருத்தி விளங்கிக்கொள்வதில்லையா...
அது போலத்தான் கடையிலிருந்தோரும், அந்த இளம்பெண்ணும் ‘கோனெ’ என்றதை ‘கூனெ’ என நினைத்து தலையைச் சொறிந்து கொண்டனர்.
அநேகமான தமிழர்கள், ‘ஹ’ என்பதற்கு பதிலாக ‘க’ என்றே உச்சரிப்பர்.
ஆக, நோர்வேஜிய மொழியை கற்காமல் கடைக்குச் செல்வோருக்கு  இப்படிப்பட்ட சங்கோஜமான, இடர்பாடான நேரங்கள் வரத்தான் செய்யும்...

“காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்...” என்றொரு மிக நல்ல பழைய தமிழ்ப்பாடல் உள்ளது...
இவர் கோழி வாங்கப் போய் ஒரு கொடுமையை வாங்கி வரவில்லை.
நோர்வே நாட்டவர்கள் அப்படிப்பட்டவரல்லர்...

ஆங்கிலம் தெரிந்திருந்தும், கோழி வாங்கப் போனவர்; கடையில் பெண் கேட்டாராம் என்றாகிறது.

Saturday 17 July 2010

மன்றாட்டம்...


தாராயோ தங்க நிறம்
தயவாய்க் கேட்கிறேன்;
சீராகும் என் நிறமும் ஒரு
சிட்டிகை தந்திட்டால்...


எனது தங்க மீன்கள், அவ்வப்போது நிழல்ப்படக்கருவியுடன் நீண்ட நேரம் அவற்றிற்கு முன்னாலிருந்து அவை செய்யும் குறும்புகளையும் அவை தரும் கண்ணுக்குக் கவர்ச்சியான நிலைகளையும் (pose) படமாகப் பிடித்து வைப்பேன். இந்த நிலை அவற்றில் ஒன்று.

இந்த இரண்டு மீன்களுக்குமிடையில் ஏதோ சண்டையோ.. என்னவோ...

ஆனால், அவை நின்ற விதத்தைப் பார்க்கும் போது, எனக்கு வீட்டில் நாங்கள் ஒருவர் பொருளை ஒருவர் எடுத்துப் பாவிப்பதற்கு மன்றாடுவோம், போராடுவோம், தாஜா பண்ணுவோம்... எவ்வளவோ நடக்கும் எங்களது வீட்டில்... 
அது ஞாபகம் வரவே அவற்றின் நிலையை வைத்து இப்படி எழுதினேன்...

சுஜி...

Wednesday 14 July 2010

மொழியும் நானும் -1- சீனி வாங்கப் போனவள்...

ஆங்கிலம் நடைமுறையில் இல்லாத ஒரு அந்நிய நாட்டுக்கு நாம் ஒருவரைத் திருமணம் செய்து சென்றோமானால்; முதலில் நடைமுறைத் தேவைகளுக்கு மொழியைத் தெரிந்து கொளவது அவசிமாகிறது.

நண்பர்கள் இருவர் பகிர்ந்து கொண்ட உண்மைச் சம்பவங்களே இதற்குச் சான்று.

இப்போது அனேகமாக எல்லா நாடுகளிலும் பல சரக்குக் கடைகள், நம் நாட்டுப் பெட்டிக்கடைகள் போலுள்ள மிகச் சிறிய கடைகள் எல்லாவற்றிலும்  நாமே கடைக்குள் சென்று, எமக்குத் தேவையான பொருட்களை எடுத்து வந்து விலை போடுவோரிடம் விலை போட்டு பணத்தைச் செலுத்தும்முறை வந்துவிட்டது.

இதற்கு இந்நாட்டு மொழியை நன்கு கற்றுத்தெரியவேண்டியதில்லை.  பொருட்கள் பொதி செய்யப்பட்டு, உரிய படங்கள், விளக்கங்கள்  போன்றவற்றை பொதி உறையில் அச்சிட்டு அடுக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் சில பொருட்களுக்கு உதவியை நாட வேண்டியது அவசியம்.

‘சீனி’(sugar)யையும் ‘உப்பு’(salt)வையும் ஒரு மொழி தெரியாதவர் - ஆங்கிலமேனும் தெரியாதவர் - கொள்வனவு செய்வது கடினம்.

இங்கே பிற நாடுகளிலிருந்து வருவோருக்கு மொழிக் கல்வியும் நடைமுறை வழக்கங்களும் முதலில் சொல்லிக் கொடுப்பார்கள்... மொழிக்கல்வி ஆகக் குறைந்தது 500 மணித்தியாலம் பயின்றேயாக வேண்டும். மொழிக்கல்வி பயின்றோருக்கு எந்த வித சிக்கலுமில்லை.

சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி எப்போதுமே உதவி செய்வார்.

‘அப்புறம் என்ன கடினம் என்று கேட்கிறீர்களா...?’
ஆம் அவர்களுக்கு ஒரு கடினமுமில்லைத்தான், ஆனால் அவர்கள் திருமணம் செய்து துணைவியரை அழைத்தால், அந்தத் துணைவியர் விரும்பினால் இந்நாட்டு மொழியைக் கற்றுக் கொள்ளலாம் என்றிருந்தது ஏறத் தாழ நான்கு ஐந்து வருடங்கள் வரையில். இன்று புதிதாக வரும் எல்லோருமே இந்நாட்டு மொழியைக் கட்டாயமாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படி விரும்பினால் இந்நாட்டு மொழியைக் கற்கலாம் என்றிருந்த காலத்தில் வந்த எமது தமிழ் பெணகளெல்லாம் மொழி கற்காமலேயே இருந்திருக்கிறார்கள்.

இனிப்பான ஒரு உதாரணம்:

ஒரு நண்பர் தனது புது மனைவிக்கு எல்லாவற்றையும் விளக்கமாகக் கூறிவிட்டு அவர் வேலைக்குச் சென்று விட்டார்.

- அநேகமானோருக்கு அவர்களது துணைவியர் தாமதமாகவே வந்து சேர்வர். இது குடிவரவு குடியல்வுத் திணைக்களங்களால் ஏற்படும் கால தாமதமாகும். ஆனால் திருமணம் செய்து அழைத்தவர்களோ ஒரு நாள் விடுமுறைகூட எடுக்க முடியாத நிலையிலிருப்பர்.

சந்தோஷமாகக் கழியும் நாட்களில் புது மணத்தம்பதிக்கு நடைமுறையிலுள்ள சிக்கல்கள் கண்ணுக்குப் புலப்படுமா..?! இல்லை!!-

வீட்டில் தனியே தமிழ் படம் (video tape) பார்த்துக் கொண்டிருந்த அந்தப் புதுப்பெண், தேநீர் தயாரிக்கலானார். நல்லவேளை அவளது புதுக் கணவர் கோப்பிப் பொடியும் (instant coffee. - not filter coffee -) தேயிலையும் (tea leaves - not tea bags-) வாங்கி வைத்திருந்தார். ஆனால் சீனியிருக்கும் ஒரு சாடியுள் சீனி இருக்கவில்லை. சீனி தீர்ந்து விட்டது அல்லது சீனி முடிந்து விட்டது. புதுப் பெண்ணுக்கு அவளது கணவர் எற்கனவே அவர்கள் குடியிருந்த அடுக்குமாடி வீடுகளின் நிலத்தளத்திலுள்ள கடைகளைக் காட்டியுள்ளார். மனத் தெம்புடன் கடைக்குச் சென்றாள் அந்தப் புதுப் பெண்.

கடைக்குள் ஒவ்வொரு அடுக்குகளாகத் தேடிக் கடைசியில் ஓர் அடுக்கில் ஒரு பெட்டியை எடுத்து குலுக்கிப் பார்த்தபோது, (சீனிப் பொதி இறுக்கமாக இருக்கும் குலுங்காது) அது சீனிச் சரையில் சீனி சரசரப்பது போல இருந்தது அந்தப் புதுப் பெண்ணுக்கு.
சீனி தின்ற குழந்தையைப் போலொரு சந்தோஷத்தோடு பணத்தைக் கொடுத்து மிகுதியையும் வாங்கிக் கொண்டு ஒரே ஓட்டமாக வீடு வந்து சேர்ந்தாள்.

ஒரு நிமிடங்கூட தாமதிக்காது பெட்டியை பிரித்து உள்ளே தேநீர்க் கரண்டியை நுழைத்து இரண்டு கரண்டிக்குப் பதில் மூன்று கரண்டி சீனிப்பழிங்குகளை தேநீருள் போடடு கலக்கிக் கொண்டு ‘அப்பாடா’ என தொலைக்காட்சிப் பெட்டிக்கு எதிரே அமர்ந்தாள்.

சந்திரனில் முதன்முதலில் காலடியெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ரோங் (Neil Armstrong) இற்கு அப்படியொரு சந்தோஷம், உற்சாகம், மன நிறைவு, பெருமிதம் இருந்ததோ இல்லையோ அவளுக்கு இருந்தது.

தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த தமிழ்ப்படத்தைப் பார்த்துக்கொண்டே தேநீர்க் கோப்பையை வாயில் வைத்து  ஒருதரம் உறிஞ்சி சுவைத்தாள்.

வாய்க்குள் வந்த தேநீரை வெளியே உடனே துப்பவேண்டும் போலிருந்தது. ஓடிச்சென்று குளியலறையில் துப்பி வாயைக் குளிர் நீரால் கொப்பளித்துவிட்டு வந்தாள். தேநீர் ஒரே உப்பாக இருந்தது அவளுக்கு. அவளால் நம்ப முடியவில்லை...

சமையலறையில் தான் வாங்கிவந்த அந்தச் சீனிப் பெட்டியில் ஒரு சிட்டிகை எடுத்து வாயில்ப்போட்டுப்பார்த்தாள். அதுவும் உப்புச் சுவையைத் தந்தது. மீண்டும் ஒரு சிட்டிகை எடுத்து வாயில்ப் போட்டுச் சுவைத்துப்பார்த்தாள். எத்தனை தடவை ஒரே பெட்டியிலிருந்து எடுத்துச் சுவைத்தாலும் உப்பு சீனியாகுமா...? அதன் பின்னர்தான் அவள் உணர்ந்தாள் தான் வாங்கிவந்தது சீனியல்ல, உப்பு என.

பின்னர்தான் அவள் அந்தப் பெட்டியில் எழுதியிருந்ததைப் பார்த்தாள் அது ஆங்கிலமாகவே இருந்தது, உப்பு என எழுதியிருந்தது.

பின்னர் புதுக் கணவரின் புத்தக அடுக்கில் இருந்த ஆங்கிலம் - நோர்வேஜியன் மொழி அகரதியில் சீனிக்கு என்ன எழுதியிருக்கிறார்கள் எனப்பார்த்து (sukker) அதை அப்படியே ஒரு சீட்டில் எழுதி எடுத்துக் கொண்டு சென்று கடையில் சீனியை வாங்கி வந்தாள்.

முதலில் ஒரு சிட்டிகை வாயில்ப் போட்டுப்பார்த்து அது சீனிதான் என உறுதி செய்த பின் தேநீரில் போட்டுக் குடித்தாளாம்.

கணவர் வந்ததும் அதைச் சொல்லி அவள் சிரித்தாள், ஆனால் அவளது கணவர் தான் செய்த தவறை யோசித்து உடனேயே தன் புது மனைவிக்கு இந்நாட்டு மொழி கற்பித்தாராம்.

‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பர் ஆனால் தேநீருக்குச் சீனிதானே சுவை சேர்க்கும்

Thursday 8 July 2010

அன்னம் இரண்டு...


அழகான அன்னம் இரண்டு,
அசையாத நீரோ ஒன்று;
பழகிய முறையோ பண்பு,
பருகிய காதல் கண்டு,
இழகிய மனமும் ஒன்று;
இயற்கையின் அது பண்பு,
சிந்தையும் கவர்ந்தது இன்று...

Friday 2 July 2010

இன்பவடு...

இன்பவடு இதயத்தில் நினைவுகள்
இரத்தத்தில் சிவப்பணு;

இதயத் துடிப்பலைகள்
இமயத்தையும் கடந்திடும்;

இதய இன்ப வடுவோ
துடிப் படங்கும் வரை;
உடற் கூறு ஓடி யாட
இதயம் வலி தாங்கும்;

எங்கோ ஒரு மூலையில்
ஏதோ ஒன்று நெருடும்;

காலக் கோலங்களில்
அடிபட்டுப் போகும்
அகல விரியும்
ஆழ்கடல் பிரிக்கும்
ஆனாலும்
இன்ப வடு
வருட வருட
தரும் சுகமே
ஆயுள் வரைக்கும்...

Thursday 1 July 2010

உன் பெயர் சொல்ல ஆசை...

உண்மை சொல்ல ஆசை
உனக்குச் சொல்ல ஆசை

நேற்றுச் சொன்ன பெயரை
இன்று சொல்ல ஆசை;
நேரில் வந்து நின்று
நேசம் சொல்ல ஆசை - உன்

கண்ணிமைக்கு முன்னே
காதில் சொல்ல ஆசை;
எண்ண மதில் என்ன
என்று சொல்ல ஆசை - அதை

உன்னை மட்டும் அருகில்
அழைத்துச் சொல்ல ஆசை;
உன்னிடம் சொல்லி
நாண வைக்க ஆசை - உன்

கண்களைக் கண்டு
கவிதை சொல்ல ஆசை;
கனவினில் வந்து
கலகம் செய்ய ஆசை - வேறு

பெண்களைக் கண்டால்
விலகிச் செல்ல ஆசை;
உன்னை மட்டும் கட்டி
அணைத்துக் கொள்ள ஆசை...

உண்மை சொல்ல ஆசை
உனக்குச் சொல்ல ஆசை...

மெதுவாகத் தோழ்களில்
சாய்ந்து கொள்ள ஆசை;
இதமாக கால்களை
வருடி விட ஆசை - நீ

கண் விழிக்கும் வரையில்
கண் விழித்திருக்க ஆசை;
கன்னத்தில் கோலமிட்டு
சிவக்க வைக்க ஆசை - அதி

காலையில் எழுந்துனது
கேசம் கோதி விட ஆசை
மாலையில் மடியிருத்தி
பாட்டிசைக்க ஆசை...

உண்மை சொல்ல ஆசை
உனக்குச் சொல்ல ஆசை...


இந்தக் கவிதை 'இசைத்தென்றல்' என்ற இணையத்தளத்தில் 11.07.2005 ல் எழுதியிருந்தேன்.

இன்றைய 'இசைத்தென்றல்' இணையத்தளத்தில் அன்று பதிவான கவிதைகள் எல்லாவற்றையுமே நீக்கி விட்டார்கள்.

எனது கவிதைகளுக்கு மீண்டும் இங்கே உயிர் கொடுக்கிறேன்...