Tuesday 20 June 2017

நம்பிக்கை வரிகள்



தை பிறந்தால், வழி பிறக்கும் என்பார்கள்.
அது போல,
இருளுக்குள் செல்பவருக்கு ஒரு ஒளி கிடைத்தால் வழி தெரியும்...
வழி தெரிந்தால் சுகமாக முன்னேறலாம்...

கண்ணதாசன் வெகு அழகாகச் சொல்லியிருக்கிறார் இங்கே...

Wednesday 1 February 2017

இன்றைய பகுத்தறிவாளர்கள்... 1

பிட்டமிரண்டும் பெருவேல் காக்க...


உங்களைப் பகுத்தறிவாளன் என பலரும் பாராட்ட வேண்டுமென ஆசைப் படுகிறீர்களா... 
வெகு சுலபம்.

இந்து சமயத்தில், சைவ நெறியில் அல்லது தமிழ்ப் பழமொழிகளில் ஏதாவது ஒன்றில் அல்லது எல்லாவற்றிலுமே பரவலாக 
“பிட்டமிரண்டும் பெருவேல் காக்க” என்பது போல 
அல்லது
“பந்திக்கு முந்து படைக்குப் பிந்து” என்ற தமிழ்ப் பழமொழி...

ஏதாவது சொல்லப் பட்டிருக்கும் அதை அப்படியே எழுதி ‘இப்படியும் கடவுளைக் கேட்பதா’ ‘தமிழனை வீரத்தமிழன் என்று விட்டு இப்படி ஒரு தமிழ்ப் பழமொழியா...’
என எழுதிப் பாருங்கள்.

உங்களை சிறந்த பகுத்தறிவாளன் எனச் சொல்லி ஓராயிரம் தமிழர் உங்களது வலைப்பதிவை அல்லது வலைத்தளத்தைச் சுற்றிச் சுற்றி வருவார்கள்....
என்னைப் பொறுத்தளவில்,
‘மண்வெட்டிப் பிடியாக இராவிட்டாலும் பரவாயில்லை கோடரிக்காம்பாக இராதே...’ என்பதே எனக்குப் பிடித்தது...
ஒன்றை ஆற அமர இருந்து யோசித்து, ஆராய்ந்து அதன் பின்னர் அதைப் பற்றி எழுதவே எனக்குப் பிடிக்கும்.
இங்கே இவரது வலைப் பதிவை ஏதோ எனது போதா காலம் பார்க்க நேரிட்டது.
இவர் ஸ்கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்து முகமாக,

சேரிள முலைமார் செவ்வேல் காக்க,
நாண் ஆம் கயிற்றை நல் வேல் காக்க,
ஆண் பெண் குறியை அயில் வேல் காக்க,
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க,
வட்டக் குத்தை வடிவேல் காக்க...

என எழுதி, இப்படியாகப் போகிறது வேலைப் பட்டியல் (Job Chart)!
இந்துமதக் கடவுள் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது கஷ்டம்தான்!!

என ஏளனமாக நையாண்டி செய்து எழுதியிருக்கிறார்.
இவர் இதை எழுதச் செலவு செய்த நேரத்தில் சிறிது யோசித்திருந்திருந்தால், இதையும் இது போன்ற ஏராளமானவற்றையும் எழுதி தன்னையும் கெடுத்து, தன்னைச் சூழ்ந்தோரையும் கெடுத்திருக்க மாட்டார் எனத் தோன்றுகிறது.
ஒரு குழந்தை, எங்கேயாவது உடல் உறுப்புகளில் ஒரு எறும்பு கடித்து விட்டால், அல்லது அடிபட்டுவிட்டால், “அம்மா... எனக் கதறிக் கொண்டு வந்து தாயிடம் காட்டி மருந்து போட்டுக் கொள்வதில்லையா...”
வட்டக் குதத்தில் ஒரு பரு வந்து விட்டால், உடனே அதை வைத்தியரிடம் காட்டி அதற்கான மருந்து வாங்குவதில்லையா... வைத்தியர்களைக் கடவுள் எனச் சொல்வதுதானே வழமை.
பெற்றோரிடம் சொல்லலாம், வைத்தியரிடம் சொல்லலாம், தாதியிடம் காட்டலாம்.
Two and a half men தொலைக்காட்சி நகைச்சுவை நாடகத் தொடரில், அழகிய இளம் பெண் வைத்தியர் வந்து,
Charlie Sheenஐ “Dropp your pants, I want to check your prostate” என்றதும்
Charlie Sheen “ Yei... prostate exam” என சந்தோஷத்தோடு துள்ளிக் குதிப்பார்.

ஆம்... அழகிய பெண் வைத்தியர்கள், கட்டுமஸ்த்தான ஆண் வைத்தியர்களிடமெல்லாம் எங்களது உடலில் எல்லாப் பாகங்களையும் காட்டி மருந்து வாங்கிக் கொள்வோம். அதிலெல்லாம் சங்கோஜமோ அல்லது தவறோ இல்லை...
ஆனால்,
கடவுளிடம் என்னைக் காத்தருள் எனக் கேட்டுக் கொண்டால் மட்டும் தவறு...
பரிகசிக்க வேண்டியது... கடவுளை பரிதாப நிலைக்குத் தள்ளுவது...

யாரிடம் உடலைக் காட்டுவது என்பது அவரவர் விருப்பம்.
அது சரி, ஸ்கந்த சஷ்டி கவசம் கேட்பதால், சொல்வதால் என்ன நன்மை எனப் பலரும் கேட்கலாம்.
ஒருவர் / ஒருத்தி, கண்ணாடி முன்னால் நின்று காலையிலும் மாலையிலும் தன்னைத் தானே பார்த்து, தனக்குத் தானே,
“நான் அழகாக இருக்கிறேன். நான் ஆரோக்கிமாக இருக்கிறேன், நான் செய்யும் காரியங்கள் எல்லாம் சித்தியடையும்” எனச் சொல்லி வந்தால், 
அவரது உடலும் உள்ளமும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் வருவது மட்டுமல்லாமல், அவர் செய்யும் எந்தக் காரியத்துக்கும் மனம் மிகவும் ஒத்துழைக்கும்.

அதனால் எடுத்த காரியங்களெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாகச் சித்திக்கும்.
இதை மனோதத்துவம் படித்தவர்களிடம் அல்லது மனோ தத்துவ வைத்தியரிடம் கேட்டால் சொல்லுவார்கள்.
அதுதானே இந்தக் ஸ்கந்த சஷ்டி கவசம்.
எங்களுக்கு நாங்களே சொல்லிக் கொள்கிறோம். கந்தன், முருகன் காப்பாற்றுவான் மனமே கவலை கொள்ளத் தேவையில்லை. என மனதைத் தேற்றிக் கொள்வோமேயானால் அடுத்துச் செய்யப் போகும் காரியத்திற்கு மனம் பூரண ஒத்துழைப்பைத் தரும். செய்யும் காரியமும் சிறப்புற அமையும்.
கவசம் என்றால் என்ன... 
பிற பொருட்கள் எம்மைத் தாக்கி காயப் படுத்தாமல் இருக்க அணியும் ஒரு வன்மையான அணி...
இதுவும் நோய் நொடி எம்மைத் தாக்காமல் காத்துக் கொள்ள உதவும் ஒரு மிக வலிமையான அணி, கவசம்.

தமிழில் “பதறாத காரியம் சிதறாது” என ஒரு பழமொழி உள்ளது.
மனம் அமைதியாக இருந்தால், எடுத்த காரியம் சிறப்புற அமையும். மனம் அமைதி பெற என்ன செய்ய வேண்டும்?
அனைவருக்கும் தெரியும் தியானம் ஆங்கிலத்தில் Meditation ஒரு வழி என.
தியானத்தைப் பற்றி கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலில் வெகு அழகாகச் சொல்லியிருக்கிறார்.
“தியானம் மனதுக்கு அமைதி தரும். நீ ஆஸ்திகனாக இருந்தால், உனக்குப் பிடித்த ஒரு கடவுளை மனதில் நினைத்துக் கொண்டு இரு, நீ நாஸ்திகனாக, கடவுளை நம்பாதவனாக இருந்தால், உனக்குப் பிடித்த ஏதாவதொன்றை, ஒரு குரங்கையாவது, நினைத்துக் கொண்டு இரு.” என்றிருக்கிறார் கண்ணதாசன்.
ஆம், இன்னொரு பாடலில் கடவுளை வணங்குவது எப்படி என மிக நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் கண்ணதாசன்.
“... அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்
ஆலய வழிபாடில்லை...” என்றிருக்கிறார்.

--- சரஸ்வதி சபதம் என்ற படத்தில், “தெய்வம் இருப்பது எங்கே...” என்றாரம்பிக்கும் பாடல்.
அதாவது மன ஒருமைப்பாடில்லாமல் கடவுளை வணங்கியும் பயனில்லை என்பதாகும்.
சரி,
ஸ்கந்த சஷ்டி கவசம் சொல்வதால், மன ஒருமைப்பாடும் தியானமும் கைகூடுமா...
ஆம்... நிட்சயமாக ஒரு இருபது நிமிடங்கள் நீங்கள் தியானத்தில் இருந்திருப்பீர்கள். மனம் புத்துண்ர்வுடன் விழித்துக்கொள்ளும்.
ஸ்கந்த சஷ்டி கவசம் சொல்லும் போது, 
1. சொற்களை அழகாகவும் அழுத்தம் திருத்தமாகவும் உச்சரிக்க வேண்டும்.
2. இராகத்தோடு சொல்லும்போது, வெகு எளிதில் மனதில்ப் பதிந்து விடும்.
3. ‘ர’க்களும் ‘டு’க்களும் எண்ணிக்கை தவறக் கூடாது.

4. ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

இப்படி வருமிடங்களில் சொற்களின் நிரை தவறக் கூடாது.
இதைக் கூர்ந்து கவனித்து நீங்கள் சொல்வீர்களானால் உங்களது மனம் வேறொன்றை நினைக்க நேரமிராது. மேலே சொன்ன வரிகள் ஐந்தாவது பந்தியில் வருகிறது.
இது போல இன்னும் பல இடங்களில் இப்படி வருகிறது.
ஆக, அந்த இருபது நிமிடங்களும் நீங்கள் ஸ்கந்த சஷ்டி கவசத்தையே கூர்ந்து கவனித்து ஸ்கந்த சஷ்டி கவசத்தைச் சொல்ல வேண்டியிருக்கும்.
மனம் Facebokkலோ, Tweeterலோ அல்லது Instergramலோ யார் என்ன எழுதியிருக்கிறார்கள் என்றோ அவர் ஏன் அப்படி எழுதினார், அவர் ஏன் இந்தப் படத்தைப் போட்டு எனது மனதை நோகடித்தாரென என நினைக்க நேரமிராது.
காரணம், ஸ்கந்த சஷ்டி கவசத்தில் அடுத்தடுத்து வரும் சொற்கள் நினைத்து நினைத்து சொல்ல வேண்டிய சொற்கள்.

பல இடங்களில் நா பிரள மறுக்கும். நாவை பிரட்டி உருட்டி தமிழை அழகாக அழுத்தம் திருத்தமாகச் சொல்வதானால், அந்தச் சொற்களை நினைத்து மனதில் இருத்திச் சொல்ல வேண்டும்.
மேலே சொன்னது போல சொல்லிப் பாருங்கள். அதைச் சொல்லி முடித்ததும், அந்த இருபது நிமிடங்களில் வேறு ஏதாவது யோசனை, சிந்தனை அல்லது வேறு ஏதாவது சிறிய ஒலி அந்த நேரத்தில் வந்ததா என யோசித்துப் பாருங்கள். உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும், அந்த இருபது நிமிடங்ளும் நீங்கள் வேறொன்றை நினைக்கவில்லை, உங்களது கவனம் முழுக்க முழுக்க ஸ்கந்த சஷ்டி கவசத்திலேயே இருந்ததை உணர்வீர்கள்.
அதுதானே தியானம்.
சூலமங்கலம் சகோதரிகள் பாடிய ஸ்கந்த சஷ்டி கவசத்தையே இலங்கையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இசைக்கும். அதைக் கேட்டுப் பழகியதாலோ என்னவோ அவர்களின் குரலில் ஸகந்த சஷ்டி கவசம், சுப்பிரபாதம் கேட்க எனக்குப் பிடிக்கும்.
அதனால், கீழே தந்திருக்கும் ‘யூற்யூப்’ YouTube இணைப்பில் அவர்கள் பாடிய ஸ்கந்த சஷ்டி கவசத்தை நீங்கள் கேட்கலாம்... குறுவட்டு வாங்கி வைத்திருந்தால் அல்லது தரவிறக்கம் செய்து வைத்திருந்தால், நீங்கள் விரும்பும் நேரத்தில் இசைக்க வசதியாக இருக்கும்.
கண்களை மூடிக் கொண்டு, அவர்களோடு ஒரு முறை சொல்லிப் பாருங்கள்...
இருபது நிமிடத்தின் பின் ஒரு புதுப் பிரகாசத்தை நீங்கள் உணர்வீர்கள். தியானம் செய்தது போல ஒரு புதுத் தெம்பு வந்ததை உணர்வீர்கள்.

காலையில் வேலைக்குச் செல்வதற்கு முன் இந்தக் ஸ்கந்த சஷ்டி கவசத்தை சூலமங்கலம் சகோதரிகளோடு ஒரு முறை சொல்லிப்பார்த்துவிட்டு வேலைக்குச் செல்லுங்கள், அன்று உங்களை எல்லோரும் “இன்று நீ அழகாக இருக்கிறாய்” எனச் சொல்லக் கூடும்.
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது தமிழ்ப் பழமொழி, இது நம் முன்னோர் அறியாமல்ச் சொல்லவில்லை.
நீங்கள் எதையாவது நினைத்துக் குழம்பிக் கொண்டிருந்தால்,
உங்களைப் பார்ப்பவர்கள் கேட்பதில்லையா... “ என்ன பலமான யோசனை” என. அதுபோலத்தான் மனம் அமைதியாக இருந்தால், முகமும் அமைதியாக அழகாக இருக்கும்.

தினமும் இதைச் சொல்லி வந்தால், உடலில் ஏற்படும் இன்னோரன்ன வருத்தங்களை உங்களது மன வலிமையால் வர விடாது தடுத்திட முடியும். 
அது, ஸ்கந்த சஷ்டி கவசத்திலேயே சொல்லப் பட்டிருக்கிறது.

இவற்றோடு இன்னும் ஒன்றை நீங்கள் உணருவீர்கள்.
அது, தமிழ்
ஒரு நான்கு நாள் அல்லது ஒரு வாரம் இந்தக் ஸ்கந்த சஷ்டி கவசத்தை சொல்லி வந்தீர்களானால், பின்னர் நீங்கள் கதைக்கும்போதோ அல்லது ஒன்றை தமிழில் எழுதும்போதோ தமிழைத் திரிபற உச்சரிப்பீர்கள் எழுதுவீர்கள்.
இதைத்தான் தமிழில் சொல்லி வைத்தார்கள்
“சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம்” என.
“ஒரு கல்லில் இரண்டு மாங்காய்” என்பதுதான் பழமொழி.
ஆனால்,
இந்த ஸகந்த சஷ்டி கவசத்தை இந்தக் கவசத்தையே நினைத்து அழகான தமிழில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வர, பல பலன்களை நீங்கள் அடைய வாய்ப்புண்டு.
இந்து சமயத்தவர் மட்டும்தான் இதைக் கேட்டுச் சொல்ல வேண்டுமென்பது அவசியமில்லை. எல்லோருக்கும் இது பொருந்தும்.
என்னுடைய ஒரு கிறிஸ்தவ நண்பர் “முத்தைத் தரு பத்தித் திரு நகை...” என அழகாகப் பாடினார்.
திருப்புகளை நீ படிக்கிறாயா என வியந்தேன். அவர் அதற்குச் சொன்னார்.
“இலங்கை வானோலியில் அருணகிரிநாதர் படப் பாடல் என ஒலிபரப்பினார்கள். அந்தப் பாடலை இயற்றியவரும் அருணகிரிநாதர் என்றார்கள். பாடலைப் பாடப் பாட என்னால் நிறத்த முடியவில்லை. பாடல் முழுவதும் மனப் பாடமாகி விட்டது.” என்றார்.
திருப்புகளை அவர் அழுத்தம் திருத்தமாக உச்சரித்த விதத்தைக் கண்டு மகிழ்ந்தேனே தவிர இவர் திருப்புகளைப் பாடலாமா என்ற கேள்வி எனக்குள் எழவில்லை.
தமிழில் பற்றுள்ள எவரும் தமிழில் இயற்றப் பட்ட எந்த பாடலையோ தேவரம் திருவாசகத்தையோ படிக்கலாம் அதில் தவறில்லை என்பது எனது கருத்து.
K.J.Jesudhas. பிறப்பினால் ஒரு கிறிஸ்தவர் இந்துமத கடவுள் பாடல்களைப் பாடவில்லையா...
ஒன்றை நன்றாகக் கவனிக்க வேண்டும்,
ஸ்கந்த சஷ்டி கவசத்தை ஏனோ தானோ என, ஏதோ சொல்லி முடித்தால் சரி என சொல்லவதிலும் பார்க்க, இதைச் சொல்லாமல் இருப்பது நல்லது.

நான் இதை எழுத நிறையவே நேரமெடுத்தது. அப்போது, கண்ணதாசன், அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலில் சொன்னது ஞாபகம் வந்தது.
அது,
இல்லை என்பவனுக்கு எதுவும் தேவையில்லை, மாற்றி மாற்றி அது இல்லை, இது இல்லை எனச் சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்டு என்பவன், நிறைய ஆராய்ச்சி செய்யவேண்டும், நிறைய யோசிக்கவேண்டும் ஒன்றைச் சொல்வதற்கு என்றிருக்கிறார்.

இறுதியாக,
தம்மைத் தாமே பகுத்தறிவாளர் எனச் சொல்லிக் கொண்டு இந்து சமயத்தையும் சைவ நெறிகளையும் இவற்றோடு தமிழையும இழிவு படுத்துவோரது எழுத்துக்களையோ பேச்சுக்களையோ கருத்தில் கொளளாதீர்கள்.
ஏன் அவரது வலைப்பதிவில் இதை நான் எழுதவில்லை...
நான் அங்கே எனது கருத்தைச் சொன்னால் அவர் அதைப் பிரசுரிக்கப் போவதே இல்லை. விழலுக்கு இறைத்த நீர் போல ஆகும். அதனால்த்தான் நான் அவரது வலைப் பதிவில் இதை எழுதவில்லை.
ஸ்கந்தசஷ்டி கவசம் கேட்பதற்கு இணைப்பு.



இது அவரது வலைப்பதிவு இணைப்பு.