Wednesday 3 August 2016

படிக்காத மனைவி - பாகம் 9 - உறவு

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).

உலகிலுள்ள உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் ‘உறவு’ என்பது பொது. அது எவ்வகையான ‘உறவு’ என்பதில்த்தான் வேறுபாடு...


உறவு.



ஏறத்தாழ, ஒன்றரை வருடங்கள் ஒடிவிட்டன.

அருளானந்தன், சொல்வி என்ற நோர்வேஜியப் பெண்ணை நோர்வேஜிய முறைப்படி திருமணம் செய்து கொண்டதால், அருளானந்தனுக்கு வதிவிட உரிமையை நோர்வேஜிய அரசு கொடுத்திருந்தது.

சொல்வியும் அருளானந்தனும் சொல்வியின் பிறந்த இடமான சார்ப்ஸ்பொர்க் (Sarpsborg)ல் தேவாலயத்தில், சொல்வியின் பெற்றோர், உறவினருடன் சொல்வி, அருளானந்தனினதும் நண்பர்கள் சூழ இருவரதும் திருமணம் இனிதே நிறைவுற்றது.

அருளானந்தனையும் சொல்வியையும் தேனிலவைக் கொண்டாட காதல் நகரம் என அழைக்கப்படும் பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரிஸுக்கு சொல்வியின் பெற்றோர் அனுப்பி வைத்ததும் இங்கே சொல்ல வேண்டியது.

இருவரும் சுவீடனில் கல்வியை முடித்துக் கொண்டு, ஒஸ்லோவில் பொறியியல்த் துறையில் இருவரும் வேலையும் பெற்றுக் கொண்டனர்.

ஆனால்,

அருளானந்தன் எதுவுமே தனது பெற்றோரிடம் சொல்லவில்லை. இது சொல்வியைப் பயமுறுத்திக் கொண்டே இருந்தது. இலங்கையின் நிலை கட்டுக்கடங்காமல் வளர்ந்து கொண்டே சென்றது. சொல்வியின் கவலையும் அதிகரித்துக் கொண்டே சென்றது.
குமுறிக் கொண்டிருக்கும் எரிமலை, எப்போதும் வெடித்து நெருப்பைக் கக்கலாம் என மலையடிவரத்தில் இருப்போர் தவிப்பது போல, சொல்வியும் தவித்துக்கொண்டிருந்தாள்.

இருந்தும்,

ஒரு மன ஆறுதல் சொல்விக்கு இருந்தது. அது அருளானந்தனின் தங்கை மதிமலர். வேறொருவரும் இந்தியாவிலிருந்து சொல்வியோடு கதைப்பதில்லை. மதிமலரும் சொல்வியும் தொலைபேசித் தோழிகள் ஆனார்கள்.
ஒவ்வொரு முறையும் சொல்வி மதிமலருடன் கதைக்கும்போது, தானும் அருளானந்தனும் திருமணம் செய்திருப்பதை சொல்லக் கூடாது என மிகக் கவனமாக இருந்தாள்.  அது அருளானந்தனின் அன்பான வேண்டுகோள்.

முதலிலெல்லாம், மதிமலர், சொல்விக்கு நன்றி சொல்லுவாள். அருளானந்தனின் மனதை மாற்றி நோர்வேயிலேயே தங்க வைத்ததற்காக. அப்போதெல்லாம் சொல்வி உணமையை மறைப்பதை நினைத்து தவியாகத் தவித்தாள்.

ஏற்கனவே சுவீடனில் படிக்கும்போது, செலவைக் குறைப்பதற்காக தொலைபேசியை சொல்வியுடன் பகிர்ந்து கொள்வதாகச் சொல்லியிருந்ததால், அருளானந்தனின் பெற்றோர், தங்கை மதிமலர், தம்பி சிவானந்தன் எவருமே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் குடியிருப்பதாக எண்ணவில்லை.

ஒவ்வொரு சனிமாலையும் சொல்வி, மதிமலருக்கு தொலைபேசியில் அழைத்து குறைந்தது ஒரு மணி நேரமாவது உரையாடுவாள். அது சொல்விக்கு மன ஆறுதலைக் கொடுக்கிறது என்பதால், அருளானந்தனும் அதை தடுக்கவில்லை.
பலவேளைகளில், அருளானந்தனின் மடியில் படுத்திருந்தவாறே சொல்வி மதிமலருடன் கதைத்துக் கொண்டிருப்பாள்.
அந்த நேரமெல்லாம் அருளானந்தன் மிகுந்த சிரமத்தோடு தனது கைகளைக் கட்டிக் கொண்டிருப்பான்.

ஒரு சனிக்கிழமை,சொல்வியும் மதிமலரும் ஊர் வம்பு, உலக வம்பு காதல், திருமணம் என சிரித்துச் சிரித்துக் கதைத்துக் கொண்டிருக்க, சொல்வியை அணைத்த படி அருளானந்தன் தொலைக் காட்சியின் ஒலியை நிறுத்தி விட்டு தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். இடையிடையே சொல்வியை நுள்ளியும் கிள்ளியும் சிலுமிசம் செய்து கொண்டிருந்தான். திடீரென

“ Is my brother there...? (அண்ணா இருக்கிறானா...?)” எனக் கேட்டாள் மதிமலர்.

“Yes... Do you want to talk to him (ம்...ம்... இருக்கிறான். கதைக்கப்போறியா?)” என சொல்வி கேட்டுவிட்டு, தொலைபேசியை அருளானந்தனிடம் தந்தாள்.

அப்போது மதிமலர்,
“I don't know what to talk to him... we talk... (அவனோட என்னத்தைக் கதைக்கிறது... நாங்க கதைப்பம்...)”  என்றாள் மதிமலர் மறுமுனையிலிருந்து, தொலைபேசியின் ஒலி வாங்கி கை மாறியது அறியாமல்.

“அடியே...ய்... சொந்த அண்ணனோட கதைக்கிறதுக்கு ஒண்டுமில்லையோ... உன்னை என்ன செய்யிறன் பார்...” என்றான் அருளானந்தன் தமிழில். சொல்விக்கும் அது விளங்க அவளும் சிரித்தாள். மறுமுனையில் மதிமலரும் சிரித்தாள்.

“டேய் முட்டாள் அண்ணா, உன்னோட நான் கதைக்கிறேல்லையாடா... இது செல்வி எனக்கு, என்னோட கதைக்கிறதுக்கெண்டு எடுத்தது... அதாலதான் சொன்னன் அந்த முட்டாளோட நான் என்னத்தைக் கதைக்கிறதெண்டு... ” எனச் சொல்லிச் சிரித்த மதிமலர் தொடர்ந்து.

“அண்ணா... எனக்கு எவ்வளவு பெருமையாக் கிடக்கு எனக்கு ஒரு Norwegian friend இருக்கு அவ ஒவ்வொரு சனிக்கிழமையும் என்னோட கதைக்கிறதுக்காக எனக்கு telephone எடுக்கிறது எண்டு சொல்லேக்க... என்ர school friends எல்லாருக்கும் பொறாமை. நான் சொல்லுவன், என்ர அண்ணாவோட நோர்வேயில படிச்சுட்டு அண்ணாவோடையே வேலை செய்யுது அதால அண்ணா எனக்கு அவவை introduce (அறிமுகம்) செய்து வைச்சவன். செல்விக்கு எங்கட cultureல சரியான விருப்பம் அதால என்னோட கதைக்கிறது எண்டு சொல்லேக்க எவ்வளவு பெருமையாயிருக்கு தெரியுமே...
சொல்வி அருளானந்தனோடு அணைந்து இருந்ததால், மதிமலர் சொல்வதையும் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அடியேய் நான் சொல்வியோட கதைக்கக் கூடாது எண்டு சொன்னனானே... நீ என்னோட கதைக்க ஒண்டுமில்லை எண்டு சொன்னாய் அதுதான் நான் கேட்டனான்.” என்ற அருளானந்தன், தொடர்ந்து,

“சொல்வியின்ர படம் பாத்தனியே...?” என அருளானந்தன் கேட்டபோது, சொல்வி அருளானந்தனைப் பார்த்தாள்.

“ஒ... நீ labல எடுத்த ஒரு group photo அனுப்பியிருந்தனி அதில யார் ஹன்னா, யார் சொல்வி எண்டு எழுதியிருந்தனி பாத்தனான். நான் அந்தப் படம் வைச்சிருக்கிறன்.” என்றவள் தொடர்ந்து,

“ஹன்னா எங்க அண்ணா...?” என்றாள் மதிமலர்.

அருளானந்தன் சொல்வியைத் திரும்பிப் பார்த்து,

“ஹன்னா எங்கே இருக்கிறாள்...?” என சொல்வியிடம் கேட்டான் நோர்வேஜிய மொழியில்.

“She got a job in Tromsø in North Norway. She lives there now... (அவளுக்கு வட நோர்வேயில துரும்ஸோ எண்ட இடத்தில வேலை கிடைச்சிருக்கு. அவள் இப்ப அங்கயே இருக்கிறாள்) என ஆங்கிலத்தில் சொன்னாள் சொல்வி.

“கேட்டுதே உனக்கு சொல்வி சொன்னது...” எனக் கேட்டான் அருளானந்தன் மதிமலரை...

“ஓமோம்... கேட்டுது... அவ இப்ப நோத் நோர்வேயில இருக்கிறாவே...” என்றாள் மதிமலர்.

“அது சரி சொல்வியைப் படத்தில பாத்தனிதானே... எப்பிடி... வடிவே...?” எனக் கேட்டு விட்டு சொல்வியைப் பார்த்தான் அருளானந்தன்.

சொல்விக்கு அருளானந்தன் தமிழில் மதிமலரைக் கேட்டது துல்லியமாக விளங்கியது... அருளானந்தனை முறைத்துப் பார்த்து, அருளானந்தனின் கன்னத்தில் செல்லமாக கிள்ளினாள்.

“அண்ணா She is gorgeous I am jealous of her beauty... And she is so sweet அண்ணா... so soft...( அவள் மிக அழகனவள்... எனக்கு பொறாமையாயிருக்கு அவளின்ர அழகில... அதோட நல்ல இனிமையானவள்... மிகவும் மென்மையானவள்...)” என்றாள் மதிமலர்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த சொல்வியின் முகம் குங்குமம் போலச் சிவந்தது. நாணத்தால் தலை குனிந்து கொண்டாள்.
அருளானந்தன் மிக மென்மையாக சொல்வியை மறு கையால் அணைத்து  சொல்வியின் தலையில் முத்தமிட்டுவிட்டு,

“ஹேய்... நான் அவளை கலியாணங் கட்டடே...” என்றான் அருளானந்தன் இரகசியமாக.

“ஏனடா நீ ரகசிமா கதைக்கிறாய்...?” எனக் கேட்டாள் மதிமலர்.

“அடியேய் சொல்வி, பாத்றூம் (bathroom) போயிருக்கிறாள்... அவளுக்குக் கேட்டா என்ன நினைப்பாள்...?” எனச் சொன்னதும்
சொல்வி, அருளானந்தனை திரும்பவும் முறைத்தாள். அருளானந்தன் மெல்லக் கண்ணடித்தான் சொல்வியைப் பார்த்து...

“ஹா...ய்... எனக்கொரு நோர்வேஜியன் அண்ணி வரப்போறா...” என மதிமலர் ஆரவாரப்பட்டு கத்துவது தொலைபேசியில் துல்லியமாகக் கேட்டது இருவருக்கும். சொல்விக்கு மிக ஆறுதலாக இருந்தது.

“அடியேய் ஏனடி இந்தியா முழுதையும் இப்ப எழுப்புறாய்...” என்றான்

“வீட்டில ஒருத்தரும் இல்லையடா... ” என்றவள் தொடர்ந்து,

“ அண்ணா...! அம்மா இஞ்ச ஒரு பொம்பிளையப் பாத்திருக்கிறா... உன்னோட கதைக்கவேணும் எண்டு சொல்லிக் கொண்டிருக்கிறா... எல்லாம் இஞ்ச முடிவான பிறகு உன்னக் கூப்பிட்டு கலியாணம் கட்டி அனுப்புவம் எண்டிருக்கிறா...
இப்பவும் அவயளட்டத்தான் அம்மாவும் அப்பாவும் போயிருக்கினம்...” என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள் மதிமலர்.

அருளானந்தன் சொல்வியைப் பாராது,

“சரி சரி நிறைய நேரம் கதைச்சிட்டம் telephoneக்கு காசேறப்போகுது... பிறகு கதைப்பம்... ” என அவசரமாகத் தொலைபேசியைத் துண்டித்தான்.

சொல்வி தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சொல்விக்கு மதிமலர் சொன்னதோ அல்லது கடுகதியில் தமிழில் அருளானந்தன் கதைத்ததோ விளங்கவில்லை. ஆனால், அருளானந்தன் தொலைபேசியை துண்டித்த விதம் அவளுக்கு சந்தேகத்தை உண்டாக்கியது.

அருளானந்தனைப் பார்வையால் அளந்துவிட்டு மெல்ல அவனது மார்பில் சுகமாக சாய்ந்தாள். அருளானந்தனும் இரு கைகளாலும் அவளை அணைத்துக் கொண்டான்.


தொடரும்...