Monday 29 February 2016

படிக்காத மனைவி - பாகம் 7 'தனிமை' தொடர்ச்சி...

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).


உணர்ச்சிகள் உலகிலுள்ள அனைவருக்கும் பொது. அவரவர் தன்மைக்கேற்ப அவர்கள் தம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மை வேறுபடுகிறது.



தனிமை தொடர்ச்சி...


“Haiii Sweeetiii... What's up...” என்றாள் சொல்வி, கொஞ்சும் குரலில்.


Hello, could I speak to mr. Arul please...(ஹெலோ... நான் அருளோட கதைக்கலாமா... )?”  என்றது ஒரு இளம்பெண் மறுமுனையில்...

அந்தப் இளம்பெண்ணின் குரலையும், அவளது ஆங்கிலம் கதைத்த அழகையும் கேட்டபோது, சொல்வி அதிர்ந்துபோனாள். அருளானந்தனுக்கு இன்னொருத்தியும் இருக்கிறாளா... 
‘Oh... Jesus... Oh... Jesus இது உண்மையா இருக்கக் கூடாது... 
இது உண்மையா இருக்காது... அருளை எனக்குத் தெரியும்... 
அவன் அப்படிச் செய்யமாட்டான்... ’என மனதுக்குள் கடவுளை மன்றாடினாள்... தனக்குத் தானே சொல்லிக்கொண்டும் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டும்

“Hello..., Arul is not here at the moment...” (ஹெலோ... அருள் இப்ப இங்க இல்லை... ) என்றாள் சொல்வி.
சொல்வி சொல்லி முடிக்கு முன்னரே,
Oh... My... God... Oh... My... God ... please... please let me talk to him please I beg you...” (ஓ... என்ர கடவுளே... தயவு செய்து... தயவு செய்து அவரோட என்னக் கதைக்க விடுங்க... நான் உங்கள மன்றாடிக் கேக்கிறன் தயவு செய்யுங்க...) என்றது அந்தப் பெண் குரல் சொல்வியிடம் மன்றாடியது. மன்றாடியது மட்டுமல்ல, அந்த இளம்பெண்ணின் குரல் தழுதழுத்தது. அழுது விடுவாளோ என்றிருந்தது சொல்விக்கு.

சொல்விக்கு என்ன சொல்வதென்றெ தெரியவில்லை... தனது கனவுகளெல்லாம் தவிடு பொடியாகிக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தாள். ஆண்கள் எல்லோருமே இப்படித்தானா... அவளும் ஒரு பெண்தானே... அவள் எங்கே இருக்கிறாளோ... அவளுக்கும் இவனுக்கும் எப்படித் தொடர்பு வந்தது... ஏற்கனவே அருளானந்தனுக்கு இலங்கையில் திருமணம் நடந்து விட்டதா... அப்படியும் ஒரு கதை வாசித்தது சொல்வியின் ஞாபகத்துக்கு வந்து அவளை இன்னும் குழப்பியது.... என ஏதேதோ மனத்தில் நினைத்துக் குழம்பியவளாக,

“How do I explain to you... Arul is not at his home right now... he went to Oslo with a friend... Believe me... (நான் எப்பிடி உனக்கு விளங்கப் படுத்துவன்... அருள் அவற்ர வீட்டில இந்த நேரம் இல்லை... அவர் ஒஸ்லோவுக்கு ஒரு நண்பனோட போயிட்டார். என்ன நம்பு...) ” என்றவளை இடைமறித்து,

You don't understand our sitation, do you...? Please help... Please let me talk to him... ( எங்கட நிலை உனக்கு விளங்கேல்ல என்ன... தயவு செய்து... தயவு செய்து என்ன அவரோட கதைக்க விடு...)  ” என ஒரு கணம் அதிகாரமாகவும் மறுகணம் தயவாகவும் கெஞ்சியது அந்தப் பெண் குரல்.

“Believe me, if Arul is in this city, I promis I can bring to you and I have lot of questions also to him. Believe me Arul is not.... Hello... Hello.... (என்ன நம்பு அருள் இந்த நகரத்தில இருந்தா... சத்தியமா இங்க கூட்டியருவன்... எனக்கும் நிறைய அவரட்ட கேட்க இருக்கு... ஹலோ...  ஹலோ...)” சொல்வி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

சொல்விக்கு நடந்ததெல்லாம் கனவா இல்லை, நிஜம்தானா என உணர முடியாமலிருந்தது. தொலைக் காட்சியைப் பார்த்தபோது, தொலைக் காட்சிக்குத் தொடர்பில்லாததால், புள்ளிகள் விழுந்த படி ஒரே இரைச்சலோடு இருந்தது.
சொல்விக்கும் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியைப் போலவே தனது கனவுகளும் எண்ணங்களும் புள்ளி விழுந்து, ஒரே இரைச்சலாக இருப்பது போல உணர்ந்தாள். 

‘என்னென்னவோ கனவுகளோடு இருந்தேனே... அவ்வளவும் கலைந்து போய்விட்டதே... அருளானந்தனோடு இந்தியமுறைப்படி திருமணம் செய்ய வேண்டும்... நானும் சேலை கட்டி, பூவைத்து, பொட்டு வைத்து, நகைகள் எல்லாம் போட்டு...  எத்தனை கனவுகள். 
எங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் அழகு, நிறம், அறிவு எல்லாவற்றையும் சஞ்சிகைகளில் பார்த்துப் பார்த்து கத்தரித்த குழந்தைகள் படங்கள் எவ்வளவு... அத்தனையும் காற்றில் கட்டிய கோட்டைதானா...?’ எனத் தன்னைத் தானே  மீண்டும் கேட்டுக் கொண்டே புள்ளி விழுந்து இரைச்சலோடிருந்த தொலைக்காட்சியைப் பார்த்த வண்ணம் இருந்தாள் சொல்வி சிறிது நேரம். அவளுக்கு தன்னை ஒரு இருள் சூழ்ந்தது போல இருந்தது.

போர்வையை உதறி எறிந்தவள் எழுந்து தொலைக் காட்சியை நூர்த்து விட்டு, குளியலறைக்குச் சென்று கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் குளியலறைக் கண்ணடிக்கு முன்னால் நின்றால்; அவள் பின்னே வந்து அவளை இறுகக் கட்டியணைத்து கழுத்தில் முத்தமிடுவது அருளானந்தனின் வழமை.

அந்த நினைப்பில், திடீரென கண்ணாடியில் தன் பின்னால் பார்த்தாள் சொல்வி. அங்கே யாருமில்லை. நீண்டதொரு பெருமூச்சுடன் பல் துலக்கி முகம் கழுவிய பின்னர், குளியல்க் கூடத்தில் நீர் விசிறியைத் திறந்து தண்ணீர்த் திவலைகளில் கையைப் பிடித்து, நீரின் சூட்டைப் பார்த்துக்கொண்டிருந்தாள். 
அந்தக் குளியல்க் கூடத்தில் அருளானந்தன் இல்லாமல், அவனது குறும்புகள் இல்லாமல் குளித்த நாட்கள் குறைவு.
அவள் குளித்துக் கொண்டிருக்கும் போதே, ‘யாரந்தப் பெண்... அவளுக்கும் அருளுக்கும் என்ன உறவு... அதை எப்படி அறிவது...’ என சிந்தனை ஓடியது.

இதை, அவனது நண்பர்களுக்கோ தனது சிநேகிதியருக்கோ தெரியப் படுத்தக் கூடாது என திட்ட வட்டமாக நினைத்துக் கொண்டாள்.
‘ஆனால், அப்படியென்றால் அவள் யார்... அவளுக்கும் அருளுக்கும் என்ன தொடர்பு என எப்படி அறிவது... அருளானந்தன் வந்த பின் அவனையே கேட்போம்... அவனது பதில், அதன் பின் அவளுக்கு அருளானந்தனையே தொலைபேசியில்க் கதைக்க வைத்த பின்னர் என்ன செய்யலாம் என முடிவெடுக்கலாம்...’ என ஒரு முடிவுக்கு வந்தாள் சொல்வி.

“என்ர dreams எல்லாம் போச்சு... பறவாயில்லை... இந்தளவில தெரிஞ்சது...” என சத்தமாகவே தனக்கு தானே சொல்லிக் கொண்டு குளிருடைகளை அணிந்தாள் சொல்வி.  

அவளுக்கு யாரிடமும் அந்த நேரம் செல்ல விருப்பமிருக்கவில்லை. காரணம் இதுதான், யாரிடமாவது சென்றால் அவளது தாங்க முடியாத யோசனையை அவளது முகத்தை வைத்தே கண்டு பிடித்து, அவளிடமிருந்து தகவல்களை அறிந்து விடுவார்கள். அது அவளுக்குத் தெரியும். 

அதனால், அங்கே அவர்களது தொடர்மாடிக்கு அருகே இருந்த ஒரு கோப்பிக் கடைக்குச் சென்று சிற்றுண்டியும் உண்டு, கோப்பியும் அருந்தி அன்றைய நாழிதழையும் படித்து விட்டு வரலாம் என நினைத்தாள்.

வாசல்க் கதவுடன் சுவரில் இருந்த நிலைக்கண்ணாடியில் முகம், தலை, தலைமயிர் இவற்றைச் சரி செய்து கொண்டு குளிருக்ககுக் கழுத்தில் சுற்றும் துணியால் கழுத்தை இருதரம் சுற்றி அதையும் கண்ணாடியில்ப் பார்த்து சரி செய்து கொண்டு கதவைத் திறக்கும் நேரம் தொலை பேசியின் ரீங்கார நாதம் ஒலித்தது.

கழுத்தில்ச் சுற்றிய துணியைக் கழற்றி கதிரையில் எறிந்து விட்டு, தொலை பேசியின் ஒலி வாங்கியை எடுத்து,

ஹலோ...என்ற சொல்வியின் கைகள் ஏனோ நடுங்கின, குரலும் இடறியது.

Hello, I don't have enough time or money to talk to you ... Please let me talk to Arul... Please...(ஹலோ, என்னிடம் போதுமானளவு காசோ அல்லது நேரமோ இல்லை உன்னோட கதைக்கிறதுக்கு... தயவு செய்து அருளோட என்னைக் கதைக்க விடு... தயவு செய்...)” என்றது மறு முனையில் அதே பெண்குரல்.

சொல்விக்கு கால்கள் நடுங்கின. நிற்க இயலாமல் கதிரையில் சாய்ந்தாள். நடுங்கும் கைகளால் தொலைபேசியை இறுகப் பிடித்த வண்ணம் குரலை சரி செய்து கொண்டு,

“OK... Give me your number, I call you...(ஓ. கே. உன்ர இலக்கத்தைத் தா... நான் அழைக்கிறன்) என்றாள் சொல்வி.

No. I can't... Please let me talk to Arul.( இல்லை. என்னால முடியாது. தயவு செய்து அருளோட என்னைக் கதைக்க விடு...)” என்றது அந்தப் பெண் குரல்.

“I feel this is long distance call, and may I know from where you are calling...? (இது தூர இடத்து அழைப்புப் போல இருக்கு, நீ எங்கே இருந்து அழைக்கிறாய்...?) என்றாள் சொல்வி அதே நடுங்கும் குரலில்.

Yes, I am calling from India, look, I don't have enough money or time to chat with you. Please let me talk to Arul...(ஓம், நான் இந்தியாவிலேயிருந்து அழைக்கிறன். இங்க பார், என்னட்ட போதுமானளவு காசும் இல்லை நேரமும் இல்லை உன்னோட அரட்டையடிக்கிறதுக்கு... தயவு செய்து அருளோட என்னைக் கதைக்க விடு...)” என்றது அந்தப் பெண் குரல்.

சொல்வி ‘இருதலைக் கொள்ளி எறும்பு’ போலத் துடித்தாள். அந்தப் பெண் இந்தியாவிலிருந்து அழைத்தால், அவர்களுக்குத் தொலைபேசிச் செலவு அதிகமாக வரும். ஆனால், இந்த முறையும் அவள் யார்... அவளுக்கும் அருளுக்கும் என்ன உறவு என அறியாமல் விட்டு விட்டால், சொல்வியின் மண்டையே வெடித்து விடும். ஆக, ஒரு துணிவுக்கு வந்தவளாக,

“Are you Arul's wife or lover trying to talk to him...? (நீ அருளடைய மனைவியா அல்லது காதலியா அவருடன் கதைக்க விரும்புகிறாய்...?)” என்று கேட்டாள் சொல்வி. ஆனால் அப்படி நினைக்கவே அவளால் முடியவில்லை. மறுமுனையில் இருக்கும் அந்தப் பெண்ணின் நிலையையும் வசதியையும் யோசித்தே அப்படித் திடீரெனக் கேட்டாள் சொல்வி.

“What...? No... no... I am his sister... Please, please let me talk to him... Please I beg you... Pritty pleeeeease... (என்ன...? இல்லை... இல்லை... நான் அவருடைய தங்கச்சி தயவு செய்து அவரோட கதைக்க விடு... நான் உன்னைக் கெஞ்சிக் கேக்கிறன்... தயவு செய்...)” என்றாள் அந்தப் பெண்.

இப்போது, சொல்வியின் தொண்டையில் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டது. கண்களிலிருந்து நீர் பொல பொலவென கன்னத்தில் விழுந்து உருண்டது. அவளால் எதுவுமே சொல்ல முடியாமல்த் தவித்தாள். அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. விம்மி, விம்மி அழத்தொடங்கினாள் சொல்வி...

சொல்வியின் அழுகை ஒலி மறுமுனையில்த் தெளிவாகக் கேட்டது.

Are You crying... Please don't cry... Why are you crying... What did I say... Please talk to me... Oh My God my brother is going to kill me... Please don't cry... (நீ அழுறியா... அழாத... ஏன் நீ அழுறாய்... நான் என்ன சொன்னன்... தயவு செய்து என்னோட கதை... என்ர கடவுளே அண்ணா வந்து என்னைக் கொலை செய்யப் போறான்...)”  என்றாள் அருளானந்தனின் தங்கை ஆதங்கத்துடன்.

அருளானந்தனின் தங்கையின் குழந்தைத் தனமான கதையையும் ‘என்ர அண்ணா வந்து என்னைக் கொலை செய்யப் போறான்’ என அவளது ஏக்கம் நிறைந்த குழந்தைத்தனமான கதையையும் கேட்டவுடன், அழுகையினூடே சிரிக்கவும் செய்தது சொல்வியை.

ஹலோ... ஹலோ...” என்றாள் அருளானந்தனின் தங்கை...

ஒருவாறாக, சொல்வி தன்னை சுதாகரித்துக் கொண்டு,

“Hello... ” என்றாள்.

Oh... My... God... Are You crying... What did I say... I am so sorry... I just wanted to talk to Arul. That's all. It is very important... Please... (என்ர... கடவுளே... நீ அழூறியா... நான் என்ன சொன்னனான்... என்னை மன்னிச்சுடு... நான் அருளோட கதைக்கவேணும் அவ்வளவுதான். அது மிக முக்கியம்... தயவு செய்...” என்றாள் அருளானந்தனின் தங்கை மறுமுனையிலிருந்து.

“Hello, You did not mention your name... Arul's sister... May I know your name... (ஹலோ... நீ உன்ர பேரைச் சொல்லேல்ல... அருளின்ர சகோதரி...)” என்றாள் சொல்வி. சொல்வியின் குரல் பனியில் நனைந்த மலரைப் போல சிறிது அழுது ஓய்ந்து, மகிழ்ச்சியில் தோய்ந்திருந்தது.

Thank God... now your voice is very sweet... (கடவுளே... இப்ப உன்ர குரல் நல்லாயிருக்குது...)” என்றாள் அருளானந்தனின் தங்கை...

“Oh... Thank you...” என்றாள் சொல்வி மிக மகிழ்ச்சியுடன்.

“My name is Mathimalar... Everyone call me Mathy... (என்ர பேர் மதிமலர்... எல்லாரும் மதி எண்டு கூப்பிடுவினம்...)” என்றாள் அருளானந்தனின் தங்கை.

“Hi, Mathi, I am Selvi...” எனச் சொல்வி சொல்லும்போதே இடைமறித்த அருளானந்தனின் தங்கை,

I know your name. Arul told me...(உன்ர பேர் எனக்குத் தெரியும். அருள் சொன்னவர்...)” என்றாள் அருளானந்தனின் தங்கை.

“Oh... Whatelse Arul told you...? (ஓ... வேறென்ன அருள் உனக்கு சொன்னார்...?)” என்ற சொல்வி உடனேயே
“Give me your telephone number... I want to talk with you more... (உன்ர தொலைபேசி இலக்கத்தைத் தா... நான் உன்னோட நிறையக் கதைக்க வேணும்...)” என்றாள்

Oh... No... I can't give you this number. This is my uncle's telephone. He doesn't like...(ஓ... நான் தரமாட்டன். மாமா அதை விரும்புறதில்லை...)” என்றாள் அருளானந்தனின் தங்கை மதிமலர்.

“I'm living next to Arul you know... Lately, He is thinking too much and..., so not normal... I want to know why... Please Mathy... I won't make nuisance calls. Believe me... I swear... pinky swear. (உனக்குத் தெரியும் நான் அருளுக்குப் பக்கத்தில இருக்கிறது... அவர் கடுமையா யோசிக்கிறார்... மற்றது...அவற்ர போக்கு இப்ப நல்லாயில்ல... அது ஏனெண்டு தெரியவேணும். தயவு செய் மதி... நான் அனாவசியமா தொலைபேசியில தொல்லை கொடுக்க மாட்டன். நான் சத்தியம் பண்ணுறன்... ‘பிங்கி ஸ்வயர்’ )” என்றாள். 
கடைசியில் சிறு குழந்தைகள் தங்களுக்குள் சத்தியம் செய்வது போலச் பிங்கி ஸ்வயர் எனச் சொன்னாள் சொல்வி.

மறுமுனையில் மதிமலர் சிரிப்பது துல்லியமாக சொல்விக்குக் கேட்டது.
சொல்வியும் சேர்ந்து சிரித்தாள்.

“Why are you laughing...? I'm so so scared when I look at him...(ஏன் நீ சிரிக்கிறாய்...? எனக்கு சரியான பயமா இருக்கு அவனைப் பாக்கேக்க...)”  என்றாள் சொல்வி மிகுந்த ஆதங்கத்துடன்.

“We used to make pinky swear in our childhood... That's what I laughed. Sorry... Yes..., I also wanted to talk with Arul... could you please help me. (நாங்கள் ‘பிங்கி ஸ்வயர்’ எண்டு சொல்றது சின்ன வயசில. அதாலதான் சிரிச்சிட்டன்... மன்னிச்சுக்கொள்ளு... நானம் அருளொட கதைக்கவேணும்... தயவு செய்து உதவி செய்...)” என்றாள் மதிமலர், அருளானந்தனின் தங்கை.

“Please... I want to talk with you so much about Arul. Please give me this telephone number... Please. (தயவு செய்... நான் உன்னோட நிறைய அருளைப் பற்றிக் கதைக்க வேணும். தயவு செய்து இந்தத் தொலைபேசி இலக்கத்தைத் தா...)” என்று இரந்து மதிமலரைக் கேட்கும்போது, சொல்விக்குக் குரல் தழுதழுத்தது. அழுகையே வந்துவிடும் போல இருந்தது.

“OK... OK... I also wanted to talk with someone there... But you should promise me, that you won't use this telephone number any other times (ஓகே... ஓகே... நானும் யாரேனும் ஒருத்தரோட அங்க கதைக்க வேணும்... ஆனா, நீ எனக்கு சத்தியம் பண்ண வேணும் வேறொருக்காலும் இந்தத் தொலைபேசிய பாவிக்க மாட்டனெண்டு...)” என்று வலியுறுத்தினாள் மதிமலர்.

உடனேயே

“I swear... I swear...” என்றாள் சொல்வி.

“Country Code is 91...” என சொல்லத் தொடங்க, சொல்வி நடுங்கும் கைகளோடு அதை எழுதிக் கொண்டாள்.
உடனேயே,

“Hei Mathi.. Malar..., stay there with telephone, I will call you right now... (ஹேய் மதி... மலர்... ரெலிபோனோடயே நில்லு, நான் உடனேயே கூப்பிடுறன்...)” என்றாள் சொல்வி அதே தழுதழுத்த குரலில்.

“ஓ.கே...” என மதிமலர் சொல்லும்போதே சொல்வி தொலைபேசியைத் துண்டித்துவிட்டு, நடுங்கும் கையில் இருந்த தொலைபேசியில் எண்களை அமுக்கினாள். கண்களில் நீர் திரையிட்டது. இலக்கங்கள் யாவும் இரண்டாகத் தெரிந்தது சொல்விக்கு, இருந்தும் கண்ணீரை துடைக்க நேரமில்லாமல் இமைகளை பலமுறை மூடித்திறந்து கொண்டே எண்களை அமுக்கினாள்.

தொலைபேசியைக் காதில் வைத்தபோது, இந்தியாவில் தொலைபேசி மணி அடிக்கும் அந்த இரட்டை ஒலிக்குறிச் சத்தம் சொல்விக்கு புதுமையாக இருந்தது. இனிமையாக இருந்தது. கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை மறு கையால்த் துடைத்தபடி குரலைச் சரி செய்யும்போதே,
மறுமுனையில் மதிமலர்,

ஹலோ...” என்றாள்.

“ஹலோ மதி மலர்...” என சொல்லும்போது, சொல்வி அழுதே விட்டாள்.

Selvi... Are you crying... (செல்வி... அழுறியா...)”  எனக் கேட்டாள் மதிமலர், மிகுந்த ஆதங்கத்துடனும் ஆச்சர்யத்துடனும்.

இனியும் தன்னால் தன்னிலையை மறைக்க முடியாது எனத் தெரிந்த சொல்வி,

“Yes... I am... crying... (ஒம்... நான்... அழுறன்...)” என்றவள் விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.

மறுமுனையில் அதைக் கேட்டுக் கொண்டிருந்த மதிமலர்,

“Why are you crying... so much... I am so sorry... (ஏன் இவ்வளவு அழுறாய்... என்னை மன்னிச்சுடு)” என மிகவும் ஆதராவகச் சொன்னாள் மதிமலர்.

ஒருவாறாகத் தன்னை அமைதிப்படுத்தி, கண்களைத் துடைத்துக் கொண்ட சொல்வி,

“I also wanted to talk with someone there... When you agree, I couldn't hold my feelings inside... (நானும் யாராவது அங்க ஒருவரோட கதைக்கவேணும் எண்டு இருந்தனான்... நீ ஓம் எண்டவுடனே என்னை நான் கட்டுப் படுத்தேலாமப் போச்சு...)” என்றாள் சொல்வி இப்போதும் தழுதழுக்கும் குரலுடன்...

சொல்விக்கு, அருளானந்தனின் தங்கையோடு கதைக்கப் போகிறோம்... அவள் தன்னை ஏற்றுக் கொள்ளவாளா... என்ற அச்சமும் அதே நேரம், ஆனந்தப் பரவசமுமே அவளுக்கு அழுகையைக் கொண்டு வந்தது.


(தொடரும்)