Tuesday 29 June 2010

செய்யாதது...

இன்று பல தடவை பார்த்த The Big Bang Theory என்ற தொடரில் ஒரு பாகம் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஷெல்டன் கூப்பர் என்ற பௌதிக வியலாளர் ஒரு முறை ராஜ் என்ற விண்வியலாளரின் அலுவலகம் சென்றார். ராஜின் அலுவலகத்திற்கு சென்ற ஷெல்டன்;  பத்து நிமிடத்தில் ஒரு programmஐ எழுதினார். அந்தப் programm தானாகவே ராஜ் என்பவரது முழு வேலையையும் செய்து முடிக்கக் கூடியதாக அமைந்தது. ஆனால்  ஷெல்டனை தந்திரமாக வெளியே அனுப்பித் தன் வேலை தக்க வைத்துக் கொண்டார் ராஜ். எனக் கதை செல்கிறது...
(லெயொனார்ட், ஷெல்டன், ராஜேஷ், ஹவார்ட் ((Leonard, Sheldon, Howard and Rajesh) அனைவரும் ஒரே பல்கலைக்களகத்தில் வேலை பார்ப்பவர்கள். மூவர் தத்தம் துறையில் கலாநிதி பட்டம் பெற்றோர், ஹவார்ட் பொறியியலாளர்...  இவர்களோடு Penny என்ற அழகிய நங்கையும். Penny என்பவள் பௌதிகம் என்றால் கிலோ என்ன விலை எனக்கேட்கக்கூடியவள், ஒரு சிற்றுண்டிச்சாலையில் வேலை பார்ப்பவள், ஆனால் தனது அழகினால் அனைவரையும் ஆட்டி வைப்பவள். லெயொனார்ட், ஷெல்டன் குடியிருக்கும் அடுக்குமாடியில் குடியிருப்பவள்).

அந்தக்காட்சி எனது நினைவுகளில் ஒரு சம்பவத்தை அலைமோத வைத்தது...

ஒரு நாள் நான் எனது மோட்டார் வாகனத்தை (car) நிறுத்துவதற்கு இடம் தேடி அலைந்து கடைசியாக அரை மணி நேரத்தின் பின் அந்த இடம் கிடைத்த நிம்மதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு கட்டணம் செலுத்துவதற்காக நாணயக் குற்றி தேடினால் கிடைக்கவில்லை... பின்னர் கடை, கடையாக ஏறி காசை மாற்றிக் கொண்டு வர போதும் போதும் என்றாகிவிட்டது.
அதுவும் பனியில் வழுக்கி வழுக்கி நடந்த களைப்பே எனக்கு சினமூட்டியது... நல்லவேளை வாகனத்தரிப்பிட மேற்பார்வையாளர் வரவில்லை, அபராதச் சீட்டெதுவும் வாகன முகப்புக் கண்ணாடியில் இருக்கவில்லை...
ஒரு மாற்று முறை காணமுடியாதா என என் யோசனை சென்றது... 

மறுநாள் ஒரு வழிமுறையை யோசித்து அதற்கான வரைபடங்கள், செய்முறை எல்லாவற்றையும் எழுதி ஓர் உறையிலிட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு எனது உத்தியை அஞ்சலில் அனுப்புவதற்காக அஞ்சலகம் சென்றேன்.

அஞ்சலகம் சொற்ப தூரத்திலிருப்பதால் நான் நடந்தே செல்வது வழக்கம். அன்றும் நடந்து சென்றுகொண்டிருந்த வேளை, அங்கே ஒரு வாகனத்தரிப்பிடத்தில் தடித்த குளிருடையோடு ஒருவர் வாகனங்களை பார்த்து கட்டணம் செலுத்ததாமல் நிறுத்தியிருக்கும் வாகனங்களுக்கு அபராதம் எழுதிக் கொண்டிருந்தார்.

எனது நடையில் சிறிது தளர்வு எற்பட்டது... சிந்தனை வேறு விதமாகச் சென்றது. நான் பிரேரிக்கும் முறையை, யோசனையை சம்பந்தப்பட்ட அலுவலகம் ஏற்றுக் கொள்ளும் அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவர்கள் அப்படி எனது யோசனையை ஏற்றுக்கொண்டால், இவர்களுக்கெல்லாம் வேலையில்லாமல்லல்வா போய்விடும் என்ற சிந்தனை என்னுள் வளர ஆரம்பித்தது. ஆயிரத்துக்கும் மேலானோர் வேலையில்லாது வீட்டுக்குத் திரும்ப வேண்டிய நிலை வந்துவிடும். எனது இந்த யோசனையால் ஸ்தாபனங்கள்தான் பணம் திரட்டும்.

அஞ்சலகம் செல்வதற்கு பதிலாக, ஒரு கோப்பிக் கடையுள் நுழைந்தேன்.  கோப்பியை அருந்திக் கொண்டு யோசிக்கலானேன். நான் செய்யாவிட்டால் இன்னொருவன் அதை யோசித்து செய்யப்போகிறான். எனவும் ஒரு குரல் என்னுள் கேட்டது. இன்னொருவன் அதைச் செய்தால் செய்யட்டும் நான் செய்யக்கூடாது... என ஒரு உறுதியோடு கடைசித்துளி கோப்பியை ஆனந்தமாக உறிஞ்சிக் குடித்துவிட்டு அந்தக் கடித உறையோடு வீடு திரும்பினேன்.

இன்று பத்து வருடங்களாக எனது வாகனத்தை வாகனத்தரிப்பில் நிறுத்துவதும் நணயக் குற்றியில்லாது பனியில் வழுக்கி விழுந்து, வழுக்கி விழுந்து ஓடிச்சென்று கடையில் காசை மாற்றிக் கொண்டு வந்து தரிப்புக் கட்டணம் செலுத்துவதும் வழமையாகிவிட்டது.  அதில் ஒரு சினமும் இல்லை, வேதனையும் இல்லை, ஒரு சிரமும் தெரியவில்லை,  மாறாக ஒரு திருப்தி உணர்ச்சி உள்ளத்தில் எழுகிறது.

ஆயிரமாயிரம் வாகனத் தரிப்பிட மேற்பார்வையாளருக்கு வேலை தந்தாற்போலொரு பெருமிதம் என்னுள்.

அவர்களை வாகனத்தரிப்பிடத்தில் பார்க்கும் போது ஏனோ என்னையறியாத ஒரு மகிழ்ச்சி என்னுள் எழுகிறது.

1 comment:

  1. இதை நான் இங்கே எழுதியது 2010 ஆம் ஆண்டு. இது நடந்தது 2006 ஆண்டு... இன்று 2014 ஆம் ஆண்டு... இதுவரையில் இரு மாற்று முறைகளை புகுத்தியுள்ளனர், ஆனால் அவற்றில் குறைபாடுகள் உள்ளன. எனது முறையில் இந்தக் குறைபாடுகளுக்கு இடமில்லை. காரணம் ஏற்கனவே வாகனச் சொந்தக்காரருக்கு Bill அனுப்பும் வழக்கம் நடைமுறையிலுள்ளது. ஆதலால் எனக்கு இன்னமும் உள்ளூர சந்தோஷம்தான்.
    இப்போது, அவர்கள் புகுத்தியுள்ள முறைகளுக்கும் வாகனத் தரிப்பிட மேற்பார்வையாளர் வந்து வாகனங்களைப் பார்த்து உரிய முறையில் கட்டணம் செலுத்தத் தவறிய வாகனங்களுக்கு அபராதம் எழுதி வைக்கவேண்டும். ஆக, அவர்களது வேலை இல்லாமல் போகவில்லை, இந்தப் புதிய முறையினால். வங்கி அட்டையைப் பாவிக்கும் முறையில்; வங்கி அட்டையைப் பிரதி செய்யலாம். அதி குளிர் காலங்களிலும் மழை நீர் வழிந்தோடும் நேரங்களிலும் வங்கி அட்டையை ஒழுங்காக வாசிப்பதில்லை. மற்றையது, தொலைபேசி முறை. இதில் இன்னோரன்ன இடர்பாடுகள் நிறைந்துள்ளது...

    ReplyDelete

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...