Wednesday 2 June 2010

நட்பும் இழப்பும்...

நினைவுகளை மீட்டிப்பார்க்கும் போது, அது சுகமானதாகவே இருக்கும். சில நேரம்  கண்களில் நீரைச் சில வரவழைத்தாலும்; அதுவும் ஒரு ஆறுதலாக இருக்கும். இப்படிப்பட்ட சுகமான, சுவையான, வேதனையான நினைவுகள் இந்தப் புவியில் பிறந்த எல்லோருக்குமே இருக்கும்.

எனது நண்பர் ஒருவர் சொன்னது இது. அது அவரது வாழ்க்கையில் ஒரு சிறு துளி என்றே சொன்னார். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் சிறு துளியோ பெரு வெள்ளமோ அவரது  இழப்புகளில் இதுவும் ஒன்று என்றே தான் நான் கூறுவேன்.
அவரது பெயரை இங்கே குறிப்பிடவா எனக் கேட்ட போது, தனது பெயரை மட்டும் குறிப்பிடுவதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்றார்.

அதாவது ஒருவரது நினைவுகள்; அவருடைய வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட பலருடைய சந்திப்புகளால் வந்த அனுபவங்களாகவும் இருக்கலாம்.
அவற்றை இணையத்திலோ அல்லது எந்த இடத்திலோ குறிப்பிடும் போது அடுத்தவருடைய மன நிலையோ அல்லது வாழ்க்கையோ எமது குறிப்புகளோ எழுத்துக்களோ பாதிக்காத வண்ணம் நாம் பார்த்துக் கொள்வது அழகல்லவா...
அதனாலேயே அவர் அப்படி என்னிடம் வேண்டிக் கொண்டார்.

இந்த முன்னுரை இனிவரும் பதிவுகளில் நான் எழுதி இந்தப் பதிவேட்டை வாசிக்கும் உங்களை சலிப்படைய வைக்கப்போவதில்லை.
அவரது பெயர் இறஞ்சன்.

சரி... சரி... அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற அந்தச் சிறு துளியை அந்த நண்பர் சொல்வதாகவே இங்கே எழுதி வைக்கிறேன்....

இன்றைக்கு சரியாக 15 வருடங்களுக்கு முன் நான் வடக்கிலுள்ள மகாணங்களில் லொடிங்கன் என்ற இடத்தில் இருந்தேன்.
அப்போது ஒரு அண்ணனும் அவனது தங்கையும் எனக்கு பழக்கமாயினர்.

முதலில் நாம் நண்பர்களாகவே பழகி வந்தோம்.

என்ன தேவையென்றாலும் அவள் தனது சொந்த அண்ணனுக்கு பின் என்னைத்தான் அழைப்பாள். வேலைக்குச் செல்வதென்றால்; அந்த இடத்தில் பனி காலத்தில் நிறையவே சிரமப்பட வேண்டியிருக்கும். காலையிலோ மாலையிலோ அவளது அண்ணன் இல்லையென்றாலோ அல்லது அவன் களைப்பாக இருக்கிறானென்றாலோ உடனே தொலைபேசியில் என்னை அழைத்து எனது மோட்டார் வாகனத்தில் (car)செல்வது முதலில் ஆரம்பமாக இருந்தது.

என் மீது நம்பிக்கை வளர வளர நான் அவர்களது நெருங்கிய நண்பனானேன். அவர்களது வீட்டில் (apartment) உண்பது உறங்குவது அவர்களோடு தூர இடங்களுக்குச் செல்வது, அதிகமாகக் car பயணம் செய்வது Swedenக்குத்தான்.
Swedenக்கு, Norway நாட்டவருங்கூட செல்வதேனென்றால் அங்கே பொருட்களை மலிவாகக் கொள்வனவு செய்யலாம்.

அதனாலேயே நாமும் மாதம் இருமுறை Swedenக்குச் சென்று பொருட்கள் வாங்குவது வழமை.

எங்களுடைய நட்பு;  நட்பு என்ற நிலையிலிருந்து இன்னொரு பரிமாணத்துக்கு எங்களை அறியாமலே வளர்ந்து கொண்டிருந்தது. 

 இதை எப்படி அறிந்தேன் எனச் சொல்வதற்கு முன் எனது உணவு வழக்கத்தை கூறிவிடுகிறேன்.

எனக்கு ஒரு நேரம் உணவு உண்டால் அதுவே போதும் அன்றைக்கு என்பவன்.  அது அனேகமாக மாலைநேர உணவாக இருக்கும். இது இலங்கையிலிருந்து வந்த பழக்கம். ஒரு கோப்பை கோப்பி எப்போதுமே போதுமானதாக இருக்கும்.

ஆனால் அவர்கள் காலை, மதியம், மாலை என மூன்று நேரமும் பசித்துப் புசிப்பவார்கள். அனேகமாக மற்றவர் உணவருந்தும் போது நான் கோப்பி அருந்துவேன்.
எங்களது நட்பு;  நட்பு என்ற நிலையிலிருந்து அடுத்த பரிமாணம் எடுக்க ஆரம்பித்து இங்கேதான்...

ஓரிரு வருடங்களுக்குப் பின் அவள் என்னையும் தங்களுடன் உணவு உண்ணும்படி வற்புறுத்துவாள். அதிலும் ஒரு வித்தியாசத்தையும் நான் அறிய கிடைக்கவில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அந்த வற்புறுத்தலில் ஒரு அதிகாரம் இருந்தது.

எனக்குப் பசித்தாலும்; எனக்கு உணவை உண்ண வேண்டும் என நான் நினைத்தால்த்தான் நான் உணவு உண்ணச் சம்மதிப்பேன். எனது முக பாவனையிலோ அல்லது கதைக்கும் முறையிலோ எவரும் நான் பசியோடு இருப்பதை அறிந்து கொள்ளமாட்டார்கள். அப்படி ஒரு அமைப்பு எனக்கு.

 உணவு உண்ண அழைக்கும் போது, முதலில் அவள்
 "றஞ்சண்ணா சாப்பிடுங்கோ" என்றாள்.

அந்தப் பதக்கோர்வை போய் "சாப்பிடச் சொன்னா சாப்பிட வேண்டியதுதானே..." என்பாள்.

அந்த வார்த்தைக் கோர்வைகளெல்லாம் சில நாட்களில் கரைந்து போய்விட்டது.

 ஆனால் மற்றவர்களுக்கு முன்னால் என்னை வெகு அழகாகவும் மரியாதையாகவும் "நீங்கள் என்னமாதிரி சாப்பிடூறீங்களே...?" என கேட்பாள் நான் முடியாது என்றால் ஒரு சோகப்பார்வையுடன் மறு வார்த்தை பேசாது விட்டுவிடுவாள்.

நான் தனியே அகப்பட்டேனெறால் ஏதாவது இருப்பதை உண்ண வைக்காமல் விடமாட்டாள். அதுவும் இப்படித்தான் அந்த அன்பான அதட்டல் இருக்கும்:

"வாங்கோ சாப்பிடுவம்" என்பாள்; அதற்கு முன்னதாகவே அவளது அண்ணன் சாப்பாட்டு மேசையருகே அமர்ந்து விடுவான். ஆனால் நான் செல்ல வில்லை என்றால் இப்படித்தான் சொல்லுவாள்:
 "இனி 'டா' போட்டுத்தான் சொல்ல வேண்டியிருக்கும்"

அதற்கு நான் "எங்கே ஒருக்கா சொல்லித்தான் பாருங்களேன் யார் வேண்டாமெண்டது " என்பேன். பின்னர் ஏதோ ஒரு விதமாக அவள் என்னைச் சாப்பிட வைத்து விடுவாள்.

ஒருமுறை அவளது அண்ணன் வேலைக்குச் சென்றுவிட்டான். அப்போது நான் அகப்பட்டுக்கொண்டேன். அன்றும் எனது வழமையான மறுத்தலுக்கு அவளிடமிருந்து வந்தவை:" டேய் எழும்படா சாப்பிட வாடா" என்றாள். ஆனால் ஒரு அன்பான பார்வையோடும், அழகான சிரிப்போடும். குழந்தைத் தனமான குரலில் வார்த்தைகளை செல்லமாக உச்சரித்தாள்.
அந்த முக பாவனையோ 'என்னை இப்படிச் சொல்ல வைக்கிறாயே இது கடவுளுக்கே ஏற்காது' என்பது போல இருந்தது.

"இதுக்கும் நான் அசையேல்ல எண்டா அடியே விழுந்திடும்" என்றேன்.
"நல்ல 'மொப்' போடூற கொட்டன் கிடக்கு வேணுமே நாலு" என்றாள்.
இப்போதும் அந்தக் குறைவில்லாச் சிரிப்போடும் நிறைந்த அன்போடும்தான் அந்த வார்த்தைகள் அவளிடமிருந்து வெளிவந்தன.

அப்படி அவள் கதைக்கும் போதெல்லாம் 'இன்னும் நான்கு முறை அப்படிக் கதைக்க மாட்டாயா' என என் மனம் ஏங்கும்...

பின்னரெல்லாம் அவள் சரளமாக என்னுடன் கதைக்கும்போது, இந்த 'டா' இடையிடையே வந்து விழும்.
ஆனால் மரியாதை வார்த்தைகளை பிரதிபலிக்கத் தொக்கு நிற்கும் பதங்களான 'ங்கோ' 'ங்கள்' என்பன மறைந்து போகவில்லை.

இன்னும் சொல்லப்போனால் அவள் என்னிடம் மரியதைக் குறைவாக என்றுமே நடக்க அல்லது கதைக்க முற்பட்டதே இல்லை.
அவள் வேண்டுமென்றே என்னுடன் 'டா' என்று சொல்லிக் கதைக்கிறாள் என்பது அவளது முகம் காட்டித் தந்துவிடும்.
ஆனால் இதெல்லாம் அந்தப்பரிமாண வளர்ச்சியில் முதுமையடையாத முதல்ப்பக்கங்களே...

ஒருநாள் நான் கோப்பியுடன் ஒரு சிகரட்டைப் பற்றினேன்.
நான் சிகரட் பற்றும் வேளை முழுவதையும் ஒரே தரமாக இழுத்து முடிப்பதில்லை. அணைத்து வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து புகைப்பேன்.

அன்றும் நான் சிகரட்டை அணைத்து விட்டு அவளுடன் கதைத்துக் கொண்டிருந்த போது, அவள் அந்த அணைத்த துண்டத்தை எடுத்து தனது வாயில் வைத்து தீக்குச்சியின் நெருப்பினால் அதைப் பற்றவைக்க முயன்றாள்.
அப்படி அவள் முயன்றபோது, புகை புரையேறி மூச்செடுக்கச் சிரமபட்டாள். இருமிய இருமலில் உள்ளே சென்ற புகை மூக்கினாலும் வாயினாலும் வெளிவந்தது. எனக்கு அவளைப்பார்க்கவே பாவமாகவும் பரிதாபமாகவும் இருந்தது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவெனக் கொட்டியது.

அப்போதுதான் எங்களது நட்பு அடுத்த பரிணமத்தை முழுமையா அடைந்துவிட்டதை உணர்ந்தேன். வேடிக்கை விளையாட்டாக கதைப்போம், சிரிப்போம், ஆளுக்கு ஆள் அதட்டுவோம்; ஆனால் இன்று நடந்தது மிகை என்றே எனக்குத் தோன்றியது.

"ஏனடீ நீயெல்லாம் சிகரெட் குடிக்க ஆசைப்படூறாய்" என அங்கலய்த்தவனாகக் கேட்டேன். ஆம் அன்று 'டி' என்று சொல்லித்தான் கேட்டேன்; காரணம் அந்த அளவுக்கு எனக்கு வேதனையாக இருந்தது அவளை பார்த்து போது, அதனால் என்னையறியாமலே அந்த 'டீ' வந்து விட்டது. ஆனால் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை.

அதற்கு அவள் வடிந்த கண்ணீருடனும் சிறிய விம்மலுடனும் "நான் உங்களோட இருக்கிறதெண்டா எதையும் பழகித்தானே ஆக வேண்டும்" என்றாள்.

"OK என்னோட இருக்கிறதெண்டால் ஒரு நல்ல பழக்கத்தைப் பழகலாம் ஆனா சிகரெட் குடிக்க ஏன் பழக வேணும்?" என்றேன்.
ஆனால்; என்னுள் 'என்ன்ன்ன என்னோட இருக்க்க்கிறதெண்டாலோ... அதென்ன கதை எனக்கு விளங்கேல்லையே...' என என் மனம் எனக்குள் விடை தேடிக் குடைந்து கொண்டிருந்தது.

அதற்கு அவள் "பிழைதான் ஆனா இதுவும் உங்களுக்காகத்தான்" என்றாள்.

மீண்டும் என் மனதைக் குடைந்த கேள்விக்கு உரம் போட்டாற் போல ஒரு வார்த்தைக் கோர்வை. சர்வசாதாரணமாகச் சொல்லி விட்டு என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

எனக்கு அவள் முன்னரெல்லாம் கூறுவது போல 'மொப்' போடும் கட்டையால் அடித்தது போல இருந்தது. நான் எனக்குள் 'இதிலும் பார்க்க நீ எனக்கு நாலு அடி போடலாம் அந்த வலி மிகவும் குறைவாக இருந்திருக்கும்' என்று சொல்லிக் கொண்டேன்.

ஆனால் அவளுக்கு நான் சொன்னது:

"அது சொல்லாமலே தெரியுதே..." என்றுவிட்டு அந்த சாம்பல்த்தட்டை எடுத்து வெளியே எறிந்துவிட்டு வந்தேன்.
"அப்ப இனி சிகரெட் குடிக்க மாட்டீங்களே" என்றாள் மிகுந்த ஆவலுடன்.
"உங்களுக்கு முன்னால குடிக்க மாட்டன்" என்றேன்.
"கள்ளா நான் விடமாட்டன்" என்றாள்.
"நான் வகையா மாட்டுப்பட்டுப்போனன்" என்றேன்.
ஒரு நாணப் புன்சிரிப்புடன் என்னைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு இன்னொரு கோப்பை கோப்பியை என்னிடம் நீட்டினாள்.
அதன்பின் அவர்களது வீட்டில் நான் புகைப்பதே இல்லை.

ஆனால் அவளை car ஓட்ட பழகச் சொல்லி வற்புறுத்துவேன். அதற்கு ஏதாவது சொல்லி என்னிடமிருந்து நழுவிவிடுவாள்.
நானும் அவளை வற்புறுத்துவதில்லை, காரணம் எனக்கு இன்னொரு நண்பர் இருந்தார்.
தான் car ஓட்ட போவதில்லை என்று அவர் அடம்பிடித்தார். நான் ஏன் என கேட்டதற்கு அவர் சொன்னார், "ஒரு விபத்தில் எக்கச் சக்கமாகச் சிக்கிக் கொண்டேன் மயிரிளையில் உயிர் தப்பினேன், அதுக்கு பிறகு எனக்கு சரியான பயம்" என்றார்.

ஒருவேளை இவளும் ஏதாவது விபத்தில் சிக்கியதால்த்தான் இப்படியோ... என நினைத்து நான் அப்படியே விட்டுவிடுவேன்.

இப்படியே எங்கள் மூவரது நட்பும்; நட்பைத் தொடர்ந்து வந்த ஒரு நெருக்கமான பிணைப்பும் 'நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்' என்று சொல்வார்களே; அதுபோல வளர்ந்து கொண்டே போனது.

எங்களது நெருக்கம் இன்னும் மிக நெருக்கமாகிக் கொண்டிருந்ததை பார்க்க எவருக்கும் பொறுக்கவில்லை; ஏன் இறைவனுக்கும் கூட பொறுக்கவில்லை...

ஒருநாள் இரவோடிரவாக அவளை வேறொரு நாட்டிற்கு அழைத்துச் சென்று சொந்த்தில் ஒருவனுக்கு திருமணம் செய்துவிட்டார்கள்.

அவள் வேறொருவனை திருமணம் செய்து கொண்டதில் எனக்கு எந்த வித கவலையுமில்லை. ஆனால் ஏன் எங்களது நட்பு மறக்கடிக்கப்பட வேண்டும்...? அதுதான் கவலை...!

இன்று அவள் இங்கு இருந்திருந்தால்....
நான் இன்று புகைப்பழக்கத்தை அறவே விட்டிருப்பேன். அதுமட்டுமல்ல நான் இப்போது இருப்பதைப் போல நான்கு மடங்கு பெருத்தவனாகவும் இருப்பேன்.

என்று கண்கள் கலங்கியபடியே கூறி முடித்தார் எனது நண்பர்.
அவர் சொன்னவற்றிற்கு ஆதாரங்கள் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை ஏனெனில் அவரது முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சி, சோகம், கண்களில்த் தேங்கி வழிந்த கண்ணீரே போதுமானது. அதில் அந்த நட்பையாவது அவர் மீளப் பெறமுடியாது.

திருமணங்கள் யாரலும் எங்கேயும் நிட்சயிக்கப்படலாம்; ஆனால் நல்ல நண்பர்கள் என்பது கிடைத்தற்கரியது. அந்த நட்பினால் ஏற்படும் அனுபவங்கள் நினைவுகளை மீள மீட்டிப் பார்க்கும்போது ஏற்படுமே ஒருவகை சோகம் கலந்த மகிழ்ச்சி அதுதான் உன்னதமானது...

இன்னும் இதுமாதிரியான சுவையான சம்பவங்களைத் தந்து கொண்டிருப்பேன். தவறாது வந்து பாருங்கள்...

1 comment:

  1. நட்பு என Googleல் எழுதிய போது, வந்த இணைப்புகளில் ஒன்றை எதேச்சையாக ’க்ளிக்’ செய்தே, இங்கே வந்தேன்.
    உங்களது இந்தக் கதை நெஞ்சை நெருட வைத்துவிட்டது...
    உங்களது தமிழ், எழுத்து, நடை எல்லாம் நன்றாகவுள்ளது...
    தொடருங்கள்...

    ReplyDelete

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...