Tuesday 26 May 2015

படிக்காத மனைவி - பாகம் 5 'ஹலோ அங்கிள்'

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).


நோர்வேஜிய பெண்ணகளுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பன இல்லை எனப் பலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு...
அதுவும் முதல்ப் பாகங்களில் விரிகிறது.



 'ஹலோ அங்கிள்'...




அருளானந்தனும் சொல்வியும் ஒரு படுக்கையறை (Bed room), ஒரு வதிவறை (Living room), ஒரு அடுக்களை (Kitchen), ஒரு குளியல்க் கூடத்துடன் கழிகலன் கொண்ட குளியலறை (Bath & Toilet)  கொண்ட லின்டாவின் தந்தையின் தொடர் மாடி வீட்டிற்கு (Apartment) குடிபுகுந்து, ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் ஆகியிருந்தன.

அவர்களிருவரும் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான காலத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். 
கலாசாலை, வீடு, கலவி, சின்னச் சின்னச் சீண்டல், சின்னச் சின்ன சிலுமிசம், நண்பர்களுடன் கும்மாளம், 
நோர்வேயில் அருளானந்தனின் வருங்கல மாமனார் மாமியார் மைத்துனனின் அபரமிதமான உபசரிப்பு, இத்யாதி, இத்யாதி என இந்த ஒன்றரை வருட காலமும் அவர்களிருவரும் எந்த வித ஒரு சிக்கலுமில்லாமல் சிந்தனையுமில்லாமல் கழிந்தது.

குழந்தைகளைப்போல மகிழ்ச்சியாக, துன்பம் என்றால் என்ன... வாழ்க்கையில்ச் சிக்கலென்றால் என்ன... வெளி உலகில் என்ன நிகழ்கிறது, அதனால் எவ்வாறான சிக்கல்கள் தோன்றும்... அவற்றை எவ்வாறு சமாளிப்பது... என்ற எந்தவித சிந்தனையுமில்லாமல் அருளானந்தனும் சொல்வியும் இருந்தார்கள்.

அவர்களது கேள்விகளும் பதில்களும், யோசித்து முடிவெடுப்பது எல்லாமுமே...

இன்றைய உணவு வெளியேயா அல்லது சமையலா... ஐரோப்பிய உணவா இந்திய இலங்கை உணவா... சனி ஞாயிறுகளில் என்ன நேரம் எழுந்திருக்க வேண்டும்... சிநேகித சிநேகிதியர் யார் வருவார்கள்... யாரை அழைக்கலாம்... எங்கே சென்று வார இறுதியைக் கழிக்கலாம்... என்ன படம் பார்க்கலாம்... பார்த்த படத்தில் கதை, கதாபாத்திரங்களைப் பற்றி விவாதம்...
இறுதியாக இன்று எந்த நிலையில் கலவி அல்லது மறுநாள் அதை வைத்துக் கொள்வோமா...
இவைதான் அவர்களுடைய சிந்தனையும் யோசனையும் பதிலும் முடிவுகளும்.

எது எப்படி இருந்தாலும், சொல்வியிடம் ஒரு சிறிய மனத்தாங்கல் இருக்கத்தான் செய்தது. அது, ஒரு நாளுமே அருளானந்தன் சொல்வியை அவனது அப்பா அம்மா, தம்பி தங்கையுடன் தொலைபேசியில்க் கதைக்க அனுமதிப்பதில்லை.
அது ஏன் என அவளுக்குத் தெரியும்... அதுதான் அருளானந்தன் இன்னமும் அவர்களது காதலை அவனது பெற்றோருக்குச் சொல்லவில்லை என்பது.

ஆனால் அவளைக் குடைந்தெடுத்த கேள்வி என்ன என்றால், ஏன் அருளானந்தன தங்கள் காதலை இன்னமும் அவனது அப்பா-அம்மாவுக்குச் சொல்ல விரும்புகிறானில்லை என்பதும்,
எப்போது, எப்படி அவர்களது உறவை அருளானந்தனது பெற்றோருக்குச் சொல்வது... எப்போது யாழ்ப்பாணம் செல்வது... தனது வருங்கால மாமனார் மாமியாரை, மைத்துனன் மைத்துனியை எப்போது பார்ப்பாது... அவர்களெல்லோரும் தன்னோடு எப்படிப் பழகுவார்கள்... என்பதெல்லாம் அவளது விடை கிடைக்காத கேள்விகளாய் மனதை உறுத்தும்.

ஓரளவு தமிழ் கதைக்கத் தெரிந்திருப்பதாலும் எதையும் தாங்கிக் கொள்ளலாம் என்ற மனத் தைரியம் இருப்பதாலும் யாழ்ப்பாணத்தில் அவர்களோடு இருக்கும் காலத்தில் அவர்கள் மனம் கோணாத வகையில் நடந்து கொள்ளாலாம் என தன்னைத் தானே தேற்றிக் கொள்வாள். என்றுமே சொல்வி, இவை பற்றி அருளானந்தனிடம் கதைத்ததில்லை.

ஒருநாள், சொல்வி தனியே வீட்டிலிருந்தபொழுது, தொலைபேசி இனிய நாதத்துடன் ஒலித்தது.
அருளானந்தனும் சொல்வியும் வீட்டிலும் கலாசாலையிலும் இருந்தால், அநேகமாக தொலைபேசியில் தங்களது படிப்பு சம்பந்தமாகக் கதைத்து ஆய்வுகளை எழுதுவார்கள்.
அது மட்டுமல்ல, அவர்களிருவரும் தொலைபேசியிலும் காதலிப்பார்கள். நேரம் போவது தெரியாமல் தொலைபேசியிலேயே கொஞ்சிக் கொண்டிருப்பார்கள். பத்து நிமிட நேரத்தில் வீடு செல்லாம், ஆனால் பல மணிநேரம் தொலைபேசியில் கொஞ்சி விளையாடுவார்கள்.

அதனால், அந்த நேரத்தில் அருளனந்தன்தான் கலாசாலையிலிருந்து அழைக்கிறான் என்ற திடமான நம்பிக்கையில்
"Haai Sweetie... what's up..." என கொஞ்சும் குரலில் கேட்டாள் சொல்வி.

"ஹலோ... யாரிது..." என்றது ஒரு பெண் குரல் மறுமுனையிலிருந்து.

எண்ணற்ற தடவைகள் அருளானந்தனின் நண்பர்கள் தொலைபேசியில் சொல்வியுடன் தமிழில் கதைத்திருக்கிறார்கள். சொல்வி தனக்குத் தமிழ் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ளாது, அருளானந்தனிடம் தொலை பேசியின் ஒலி வாங்கியைத் (Receiver) தந்துவிடுவாள். அருளானந்தன் இல்லை என்றால் ஆங்கிலத்திலோ, நோர்வேஜிய மொழியிலோ அவர்களுடன் கதைப்பாள்.

தமிழ் விளங்கிக் கொண்டது போலவும் காட்டிக் கொள்வதில்லை. அவளது எண்ணமெல்லாம் சரளமாகத் தமிழில்க் கதைத்து அருளானந்தனை ஆச்சரியப்பட வைக்க வேண்டுமென்பதே.
அதுவும் அருளானந்தனின் தாய், தந்தை, தம்பி, தங்கை இவர்களுடன் அவள் தமிழில்க் கதைப்பதை அருளானந்தன் பார்த்து ஆச்சரியப்பட வேண்டும் என ஆவலுடன் காத்திருந்தாள். அந்த நாள் வெகு தூரத்திலும் இல்லை என்பதால், எவருக்கும் அவள் தனது தமிழறிவை வெளிக்காட்டாது இருந்தாள்.

ஆனால் எந்த ஒரு தமிழ்ப் பெண் மாணவியும் சொல்வியுடன் தமிழில்க் கதைத்துச் சீண்டுவதில்லை.

அதைவிட, அழைத்த பெண் சிறிது வயதில் முதிர்ந்தவாராகவும் தொலைபேசி அழைப்பு தூர இடத்திலிருந்து வருகிறதென்பதையும் சொல்வி புரிந்து கொண்டாள். 
ஆக, இந்தத் தமிழ்ப் பெண்ணுடன் தனக்குத் தெரிந்த தமிழில் கதைத்தாள் சொல்வி.

"ஹலோ... அருள்... அவர்... வீட்டில இல்ல... நீங்க... யாரு..." என மிகவும் ஆறுதலாகவும் சொல்லுச் சொல்லாகவும் கதைத்தாள்.

"அருளானந்தன்ர வீடில்லயா இது... பிழையான நம்பரா..." என்றது அந்தப் பெண் குரல்.

"இது சரியான நம்பர்தான்... அவரும்.... " என சொல்வி அடுத்த சொல்லுக்காக யோசித்த வேளை...

"நீ ஊர்ல எவடம்... உன்ர தமிழ் ஒரு மாதிரியிருக்கு... " என்றது அந்தப் பெண் குரல்.

"நான் நோர்வே..." என்றாள் சொல்வி.

"நீ நோர்வே நாட்டுப் பொண்ணா... தமிழ் கதைக்கிறியே..." என ஆச்சரியமாகக் கேட்டது அந்தப் பெண்குரல்.

"கொஞ்சம்... கொஞ்சம்... தெரியும்... கதைப்பன்..." என்றாள் சொல்வி அளவில்லாத சந்தோஷத்துடன் கூச்சத்துடனும்.

"Hello, this is Arul's father... (ஹலோ, இது அருளின்ர அப்பா...)" என அருளானந்தனின் தந்தை கதைத்தார்.
"Hello uncle...(ஹலோ... மாமா...)" என மட்டற்ற மகிழ்ச்சியுடன் அன்பாக அழைத்தவள் உடனேயே
"Was that Arul's mother...? (அது அருளின் அம்மாவா...)" எனக் கேட்டாள் சொல்வி, இப்போதும் அளவில்லாத மகிழ்ச்சியுடனும் ஆச்சர்யத்துடனும்.

"Yes... that was his mother...(ஓம்... அது அவனுடைய அம்மா...)" என அருளானந்தனின் தந்தை முடிப்பதற்குள் 
"Oh... My... God... I can not beilive I really talk to you...(அடக் கடவுளே... என்னால நம்ப முடியாமலிருக்கு உண்மையிலயே நான் உங்களோட கதைக்கிறன் எண்டத...)" என சொல்வி சொன்னபோது.

"May I know who you are...? and What you are doing in Arul's Apartment...? (நீ யாரெண்டு தெரிஞ்சு கொள்ளலாமா... நீ அருளின்ர வீட்டில என்ன செய்யுறாய்...)"என அருளானந்தனின் தந்தை கேட்டார்.
அப்போது, சொல்வி ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள்... அது அருளானந்தன் தங்களது காதலை அவனது பெற்றோருக்கு இன்னமும் சொல்லவில்லை என்பது.
சொல்விக்கு இதைப்பற்றி அந்த இந்தியத் தமிழ்ப் பெண், தமிழ் சொல்லித் தரும்போது, கதைத்திருந்தாள். 'பொதுவாக, காதல் வசப்பட்ட ஆணோ பெண்ணோ தமது பெற்றோரிடம் அதைச் சொல்ல பயப்படுவார்கள். எதற்கும் நீ அருளானந்தனிடம் கேட்டுத் தெரிந்துகொள். எக்குத் தப்பாக தொலைபேசியில் மாட்டிக் கொள்ளாதே' என எச்சரித்திருந்தாள். 

அருளானந்தனிடம் சொல்வி கேட்டபோதெல்லாம், 'நான் சொல்கிறேன்... நான் நிட்சமாகக் கதைக்கிறேன்' என்றானே தவிர அவன் தனது காதலை அவனது பெற்றோருக்குச் சொல்லவில்லை என்பதை அவனுடைய தந்தையின் கேள்வியிலிருந்து அறிந்து கொண்டாள்.

இந்த யோசனையெல்லாம் அசுர வேகத்தில் சொல்வியின் தலைக்குள் சுழன்று சரியான ஒரு யுக்தியை, ஒரு யோசனையைக் கொண்டு வந்தது.

"No... Uncle... I am in my room; but we share this telephone to reduce the cost... (இல்ல.. மாமா... நான் என்ர அறையில இருக்கிறன்... நாங்க ரெண்டு பேரும் இந்தத் தொலைபேசியை பகிர்ந்து கொள்றம்... செலவைக் குறைக்கிறதுக்காக...)" என்றாள் சொல்வி ஒரு பதட்டத்தையும் வெளிக்காட்டாமல்.

"Oh... that's very good idea and how... is it possible...? (ஓ... அது நல்லதொரு யோசனை... ஆனா... அதெப்பிடி... அது செய்யலாமோ...)" எனக் கேட்டார் அருளானந்தனின் தந்தை.

"Oh... Yes... It is very simple uncle... Just assume we put another one telephone in a bed room or any where else... at home... Just like that... Arul's friend who made the connection...(ஒமோம்... அது வெகு சுலபம்... இப்ப... ஒரு வீட்டிலயே ஒரு தொலைபேசியை படுக்யையறையிலயோ... அல்லது வேறேதாவது இடத்திலயோ பூட்டூற மாதிரி... அருளின்ர நண்பர் ஒருவர்தான் அப்பிடி இணைப்புக் கொடுத்தவர்..." என ஒரு பொய் சொன்னாள்.

"Oh... Yes... Yes... that's wonderful...(ஓமோம்... அது நல்லது...)" என அருளானந்தனின் தந்தை சொன்னபோது, சொல்வி மார்பில்க் கையை வைத்து, 'Oh... My... Jesus...(ஓ... என்ர யேசுவே...) தப்பிச்சேன்... Thank You...' என மனதுக்குள் கடவுளுக்கு நன்றி செலுத்தினாள்.

அவள் தங்களது காதலை அருளானந்தனே அவனது பெற்றோருக்குச் சொல்ல வேண்டும் என நினைத்தாள். அதுவே முறையானதும் என நினைத்தாள். அருளானந்தன் அவர்களது காதலைச் சொல்லாமலிருக்க, தான் அதைச் சொல்லி அதனால் அருளானந்தனின் பெற்றோர் அருளானந்தன் மீது கோபங்கொள்ளக் கூடும் எனவும் யோசித்தே அப்படி ஒரு பொய்யைச் சொன்னாள் சொல்வி.

"I didn't get your name...(உன்ர பேரைச் சொல்லேல்ல...)" என்றார் அருளானந்தனின் தந்தை.
"Oh... Sorry Uncle... My name is Selvi... uncle...(ஓ... மன்னியுங்கள் மாமா... என்ர பேர் செல்வி...)" என்றாள் சொல்வி பணிவுடன்.

"Oh... Are you Tamil...? (ஓ... நீ தமிழா...?)" என்று ஆச்சரியத்துடன் கேட்டார் அருளானந்தனின் தந்தை.
"Oh... No uncle... I am a Norwegian, but my name sounds like Tamil name... Arul also told me... (ஓ... இல்லை மாமா... நான் ஒரு நோர்வே நாட்டவள்... ஆனா என்ர பேர் தமிழ்ப் பேரைப்போல இருக்கு... அருளும் அதைச் சொன்னவர்...)" என்றாள் சொல்வி.

"Hello, Selvi... would please ask Arul to call us... We are now staying with Arul's uncle in Madras...(ஹலோ, செல்வி... தயவு செய்து...அருளை எங்களுக் தொலைபேசி எடுக்கச் சொல்கிறாயா... நாங்கள் இப்ப அருளின்ர மாமாவோட சென்னையில இருக்கிறம்...)" எனக் கேட்டுக் கொண்டார் அருளானந்தனின் தந்தை.

"Ok... Uncle... I'll tell him..."எனச் சொன்னாள் சொல்வி.

"Thank You... Selvi... It is very nice to talk with you... You are a nice girl... Take care...(நன்றி செல்வி... உன்னோட கதைச்சது சந்தோஷம்... நீ ஒரு நல்ல பிள்ளை... பாதுகாப்பாய் இரு...)" என மிகுந்த அன்புடன் சொன்னார் அருளானந்தனின் தந்தை.

சொல்விக்கு சந்தோஷத்தால் கை கால்கள் நடுங்கியது, உதடுகள் துடித்தன, நாணத்தால் முகம் சிவந்தது. சொல்வி தொடர்ந்து நிற்க இயலாமல் கதிரையில் சாய்ந்தாள்.

"Thank You uncle... And I'll take care of Arul..."என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள். ஆனால் மறுமுனையில் அது தெளிவாகக் கேட்கவில்லை...

"Bye... Bye..."என்றார் அருளானந்தனின் தந்தை.

"Bye..." என நடுங்கும் கைகளால் தொலைபேசியின் ஒலி வாங்கியை தொலைபேசியில் வைத்தவள், சோர்ந்துபோய் அப்படியே கதிரையில் அமர்ந்திருந்தாள்.

சொல்விக்கு ஒரு பக்கம் சந்தோஷம், கிளுகிளுப்பு அவள் உடலை ஆக்கிரமித்தாலும், மறு பக்கம் மூளையை குடைந்தெடுத்தது பலமான யோசனை.

அந்த யோசனையெல்லாம் அருளானந்தன் ஏன் இன்னமும் தங்களது காதலை அவனது பெற்றோருக்குச் சொல்லத் தயங்குகிறான் என்பது. சிந்தனை வசப்பட்டவளாக இருந்தவள், அப்படியே உறங்கிவிட்டாள்.

அருளானந்தன் வீடு வந்தபோது, சொல்வி கதிரையிலேயே ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

புத்தகப்பையை சத்தமில்லாது வைத்துவிட்டு, சொல்வியினருகில் வந்து நின்று அவள் நித்திரை செய்யும் அழகை சில நிமிடங்கள் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான்.
ஒவ்வொரு முறையும் சொல்வி மூச்சு இழுத்து விடுகையில் அவளது மார்பு ஏறி இறங்குவதை பார்த்து இரசித்து,

"My... Sweet... Angel...(எனது... இனிய தேவதை...)" எனச் சொல்லிக் கொண்டே சொல்வியின் நெற்றியில் முத்தமிட்டான் அருளானந்தன்.

"அ... என்ன..." எனக் கேட்டுக் கொண்டே கண் விழித்து அருளானந்தனைப் பார்த்தாள்  சொல்வி.

"எனது இனிய தேவதை... எண்டு சொன்னனான்..." என்ற அருளானந்தன், அந்த மூவர் அமரக்கூடிய கதிரையில் (Sofa) சொல்விக்கு மிக அருகில் அமர்ந்து சொல்வியை இறுக அணைத்து அவளது உதடுகளில் கனிவாக முத்தமிட்டான்.

அவனது கைகளுக்குள் சொல்வி இதமாக அவனது மார்பில் முகம் புதைத்து சிறிது நேரம் சுகம் கண்டாள்.

"அது சரி... நீ அப்பிடி என்ன செய்து... இப்பிடிக் களைச்சுப் போய் சோபாவில நித்திரை கொள்றாய்...?" என அருளானந்தன் கேட்டதும் சொல்வி அவனது கைகளுக்குள்ளேயே அணைந்து மார்பிலிருந்து விலகாமல் தலையை நிமிர்த்தி, அருளானந்தனைப் பார்த்தாள்.
பின்னர்

"எனக்கு என்னெண்டு தெரியேல்ல... மேசையில இருந்து திசீஸ் (thesis ஆய்வறிக்கை) எழுதிக் கொண்டிருந்தனான் எப்பிடி இதில வந்து நித்திரை கொண்டனெண்டு தெரியேல்ல..." எனக் குழம்பினாள்.

"நீ எதையோ கடுமையா யோசிச்சிருக்கிறாய்... அதால மூளை களைச்சுப் போயிட்டுது... கொஞ்ச நேரம் இதில இருப்பம் எண்டு வந்திருப்பாய்... அப்பிடியே நித்திரையாயிட்டாய்..." என விளக்கம் கொடுத்தான் அருளானந்தன்.

அதைக் கேட்டபோது,

திடீரென அவனது இரு கைகளையும் விலக்கிக் கொண்டு எழுந்திருந்த சொல்வி, அருளானந்தனையே பார்த்தாள். அந்தப் பார்வையில் கலக்கம் நிறைந்திருந்தது.

"ஹேய்... என்ன அப்பிடிப் பாக்கிறாய்..." எனக் குழப்பத்தோடு கேட்டான் அருளானந்தன்.

"நீ எப்ப... எங்களை அல்லது என்னைப் பற்றி உன்ர அம்மா-அப்பாவிட்ட சொல்லப் போறாய்..." என ஏக்கத்துடன் கேட்டாள் சொல்வி.

"சொல்றன்... இப்ப இலங்கேல பிரச்சனையாம் இப்ப போய் எங்களப் பற்றிக் கதைச்சா அவையள் என்ன சொல்லுவினம் எண்டு தெரியாது. ஆறுதலா நேரம் வரேக்க சொல்றன்... இப்ப எதுக்கு அதெல்லாம்... நீ அளவுக்கு அதிகமா யோசிக்கிறாய்..." என ஆறுதல் சொல்லியபடியே சொல்வியை அணைத்தான்.

சொல்வியும் அவனது மார்பில் சாய்ந்தபடி,

"நான் இண்டைக்கு உன்ர அம்மா அப்பாவோட கதைச்சனான்..." எனச் சொல்லியபடியே அவனது சட்டைக்குள் (Shirt) விரல்ளை சொருகி அருளானந்தனின் மார்பில் இருந்த மயிர்களைக் கோதி விட்டுக்கொண்டிருந்தாள்.

அருளானந்தன் திகைத்துப் போய், சொல்வியை தூக்கி நேராக இருத்தி அவளது விழிகளுக்குள் பார்த்து,

"என்ர அம்மா அப்பாவோட கதைச்சனியா...? எப்ப... என்ன சொன்னனி... அவை என்ன சொன்னவை..." என பதட்டப்பட்டான் அருளானந்தன்.

"Relax... (ஆறுதலாயிரு...) நானொண்டும் உன்ர ரகசியத்தை அவயளட்டச் சொல்லேல்ல... எனக்கு இதை அந்த இந்தியத் தமிழ்ப் பெண் சொல்லி எச்சரித்திருக்கிறாள்... " என சொன்னவளின் கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றாகிக் கன்னத்தில் வழிந்தது.

"ஹேய்... ஏனிப்ப அழுறாய்... நீ என்ன கதைச்சனி எண்டுதானே கேட்டனான்..." என சொல்வியை அணைத்தான்.

"ஆசையா... ரெண்டு வார்த்தை உன்ர அம்மாவோட கதைக்கேலாமப்போச்சு... ஆசையா... உன்ர அப்பாவை 'அங்கிள்' எண்டன்... அவர்... அவர்... 'யார் நீ...' எண்டு கேட்டுட்டார்..." என விம்மலினூடே சொன்னாள் சொல்வி.

"ஹேய்... அழாத... அம்மா அவ்வளவுக்கு இங்கிலீஸ் கதைக்கமாட்டா... அப்பாவுக்குத் தெரியாததால நீ யார்... எண்டு கேட்டிருப்பார். இப்ப... உதாரணத்துக்கு நீ நோர்வேயில இருக்கிறாய் இங்க நீ கோல் (Call) எடுக்கேக்க... ஒரு பொம்பிள கதைச்சா நீ என்ன கேட்பாய்..." எனச் சமாதனம் சொல்லும் வகையில் அருளானந்தன் கேட்டபோது,

அவனது மார்பை விட்டெழுந்து அருளானந்தனின் முகத்தைப் பார்த்து,

"அடுத்த ப்ளைட்டில (flight) இங்க வந்து நிப்பன்..." எனச் சொல்லி அவனது மார்பில் 'தும் தும் தும்' எனக் குத்தினாள் சொல்வி.

சொல்வியை அப்படியே அணைத்து அவளது உதடுகளில் முத்தங் கொடுத்தான் அருளானந்தன்.

"ஹேய்... உன்ர அம்மா அப்பா, தம்பி தங்கை எல்லாரும் இந்தியாவுக்கு வந்திருக்கினமாம். உன்ர அங்கிள் வீடடிலதான் தங்கியிருக்கினமாம்... உன்னை கோல் பண்ணச் சொல்லச் சொன்னார் உன்ர அப்பா... என்ர மாமா..." என வெட்கத்துடன் சொல்லி அவனது மார்பில் முகம் புதைத்தாள் சொல்வி...

"ஐயோ வெக்கத்தைப் பார்... முகமெல்லாம் வெக்கத்தில சிவந்து போச்சு..." என சொல்வியை அணைத்து அவளது உச்சியல் முத்தமிட்ட அருளானந்தன், தொலைபேசியைின் ஒலிவாங்கியை எடுத்து, எண்களை அமுக்கினான்.

சொல்வி அவனது மடியில் படுத்திருந்தபடியே தொலைக் காட்சிப் பெட்டியை இயக்கி சத்தமில்லாது பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு பத்து, பதினைந்து நிமிடம் அருளானந்தன் தொலைபேசியில் அவனது அம்மா அப்பாவுடன் கதைத்து முடித்தவன் தொலைபேசியை வைத்துவிட்டு, சொல்வியின் பொன்னிறக் கேசங்களைக் கோதிவிட்டுக் கொண்டிருந்தான்.
சொல்விக்கு அருளானந்தனின் தமிழ் ஓரளவுக்கு விளங்கினாலும் முழுவதையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

சொல்வி நிமிர்ந்து அருளானந்தனைப் பார்த்தாள். அவளது பார்வையில் 'நாம் யாழ்ப்பாணம் போக முடியாதா...' என்ற கேள்வி நிறைந்திருதது. அருளானந்தன் சொல்வியின் பார்வையை சந்திக்கத் தைரியமில்லாது, சுவரை வெறித்துப் பார்த்த வண்ணம் அவனது மடியில்ப் படுத்திருந்த சொல்வியின் தலைமுடியைக் கோதிக்கொண்டிருந்தான்.

தொடரும்...

No comments:

Post a Comment

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...