Friday 30 July 2010

மொழியும் நானும் - 2 - கோழி வாங்கப்போனவர்...

ஆங்கிலம் தெரிந்தாலும் சில பொருட்களை இங்கே கொள்வனவு செய்வதென்றால் இந்நாட்டு மொழி; நோர்வேஜிய மொழி சிறிதளவாவது தெரிந்திருக்க வேண்டும்.

நல்லவேளை நோர்வேஜியர்கள் மொழி தெரியதவர் ஒருவர் தவறாக எதுவும்  கூறிவிட்டால் அதை மன்னிப்பது மட்டுமல்ல உடனேயே மறந்தும் விடுவார்கள்.

முதலில் ஒரு தமிழ் பெண் என்ன செய்தாள், என்பதைக் கூறிவிடுகிறேன்.
ஏதோ ஒரு தமிழ்ப்படம் நிறைவுற்ற பின், நன்கு மொழி தெரிந்த பல தமிழ்ப்பெண்கள் கூட்டமாக வெளியே தத்தம் கணவர்மாருக்காக காத்திருந்தனர். கணவர்மார் வாகனத்தரிப்பிடத்திலிருந்து தத்தம் வாகனங்களை எடுத்து வரச் சென்றிருந்தனர்.
இந்த நேரம் ஒரு நோர்வேஜியர் ஒரு வைபவத்தில்க் கலந்துகொள்ள அந்த வழியே வந்தார்.

(அமெரிக்காவில் அல்லது மேலைத்தேச நாடுகளில் அனேகமாக துணையில்லாமல் ஒரு வைபவத்திற்குச் செல்லமாட்டார்கள். இதெற்கென்றே நிறுவனங்கள்கூட உள்ளது. அவரவர் தேவைக்கேற்ப பெண்களையோ அல்லது ஆண்களையோ சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுப்பி வைக்கும். ஆனால் நிறையவே செலவாகும். இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தெரிந்தவர்கள் யாரையாவது கேட்பார்கள். அப்படியும் யாரும் கிடைக்கவில்லையென்றால் மதுபானங்கள் விற்குமிடங்களில் யாரையாவது கேட்பார்கள்.)

அங்கே வந்தவர் அழகழகான பெண்கள்;  சேலை, சுடிதார், சல்வார் கமீ்ஸ் என அழகழகான    இந்திய உடைகளில்     கூட்டமாக நிற்பதைக் கண்டதும், தனது எண்ணத்தை அங்கே நின்ற ஒரு அழகான தமிழ்ப் பெண்ணிடம் தெரிவிக்க அந்தத்தமிழ்ப்பெண் மறுத்ததுமட்டுமல்லாமல் அழத்தொடங்கிவிட்டாராம். அந்த இரவு முழுவதும் அந்தத் தமிழ்ப் பெண் தன் கணவர் நேரத்திற்கு வாகனத்தை கொணர்ந்திருந்தால் அந்த நோர்வேஜியன் அப்படிக் கேட்டிருக்க மாட்டான் எனச் சொல்லி அவளது கணவரையும்   வைது, அழுதுகொண்டிருந்தாராம்.

இனி நான் சொல்ல வந்த நகைச் சுவைச் சம்பவத்தைச் சொல்கிறேன்...

புதிதாக ஒருவர் நோர்வேயிற்கு வந்திருந்தார். அவர் அவரது நண்பரது அறையில் தங்கியிருந்தார்.
ஒருநாள் அவர்கள் கோழிக்கறி சமைக்க முற்பட்டார்கள். அதற்கு கோழி வாங்குவதற்கு அந்தப் புதிதாக வந்த நண்பரை கடைக்குச் செல்லுமாறு சொன்னார். புதிதாக வந்தவருக்கு ஓரளவு ஆங்கிலம் தெரியும். ஆகவே அவர் தைரியமாக கடைக்குச் சென்றார்.

இங்கே முட்டைக்கோழி அல்லது இறைச்சிக்கோழியை உயிரோடு வாங்க முடியாது. அப்படி வாங்குவதானால் கோழிப்பண்ணைக்குத்தான் செல்ல வேண்டும். கோழிகளின் தலைகளை வெட்டி, குடல், சிறகு போன்றவற்றை அகற்றி பொதியில அடைத்து அதி குளிரூட்டியில் வைத்திருப்பார்கள். நாங்கள் அதைச் சிறிது இழக வைத்த பின்  தோலை உரித்து, வெட்டிக் கறி சமைப்போம்.

கடைக்குச் சென்ற புதிதாக வந்த நம் தமிழர், அதி குளிரூட்டியில் கோழியை கண்டெடுக்க முடியவில்லை.
ஆக, அருகில் நின்ற அழகான நோர்வே நாட்டு இளம் பெண்ணிடம் அவரது நண்பர் சொல்லிக் கொடுத்த அதே வசனத்தை அப்படியே ஒப்பித்தார்.
அதை அப்படியே இங்கே எழுதுகிறேன்.

" Jeg vil ha kone..." "kan du hjelpe meg?"

தமிழாக்கம்:

"எனக்கு மனைவி வேண்டும்..." "நீ எனக்கு உதவி செய்வாயா?"

“யெய் வில் ஹா கோனெ...” “கான் டு யெல்ப்ப மெய்?” என்றுதான் அந்தத்தமிழர் கூறினார்.
 
இதை அந்த நோர்வே நாட்டு இளம் பெண் மட்டுமல்ல அனைவரும் புரிந்து கொண்ட விதம்: “யெய் வில் ஹா கூனெ” என்றே...

அந்த இளம் நோர்வே நாட்டுப் பெண் அதிர்ந்து போய் அந்தத் தமிழரைப்பார்த்து "என்ன" என்றாள்.

அந்தத்தமிழரோ அதே வசனங்களை அப்படியே கூறினார்,  இப்போது அந்த அதி குளிரூட்டியைக் காட்டியபடி.
அந்தப் பெண்ணுக்கு ஒன்றுமட்டும் விளங்கியது அது: அந்தத்தமிழர் தன்னைப் பெண் கேட்கவில்லை என்பது.

உடனே கடையில் வேலை செய்வோரிடம் “இவன் ஏதோ கேட்கிறான்” எனக் கூறி கடையில் வேலை செய்பவரிடம் அந்தத்தமிழரை ஒப்படைத்து விட்டாள் அந்த நோர்வே நாட்டு இளம் பெண்.

இதே இடத்தில் ஒரு தமிழ்ப்பெண் என்ன செய்திருப்பாள் என யோசித்துப் பாருங்கள்.

அந்தத்தமிழரோ  அதே வசனங்களை கடையில் வேலை செய்வோரிடமும் ஒப்பித்தார்.
கடையில் வேலை செய்வோர் தலையைச் சொறிந்து கொண்டனர்.

புதிதாக வந்த அந்தத் தமிழருக்கு தான் சொல்வதில் ஏதோ பிழையிருக்கிறது எனப் புரிந்து கொண்டார்.

வேறு வழி என யோசித்த அந்தத்தமிழர், கோழியைப் போல கொக்கரித்து கைகளை மடக்கி கோழி சிறகடிப்பது போல செய்தாராம். அதன் பின்னர்தான் கடையிலிருந்தோருக்கு அந்தத்தமிழர் கோழி வாங்க வந்திருக்கிறார் என்பது ஓரளவிற்கு விளங்கியது.

கோழியை எடுத்துக் கொடுத்து உதவி செய்தனராம்.

கோழிக்கு நோர்வேஜிய மொழியில் 'HØNE' என்பதாகும்.  தமிழில் ஓரளவிற்கு அதை எழுத்தில் ‘ஹோனெ’ என எழுதலாம், ஆனால் அது முழுமையான உச்சரிப்பைத் தராது. ஆங்கில உயிரெழுத்தான ‘O’ வை வெட்டியிருப்பது போல ஒரு உயிரெழுத்துள்ளது. இதன் உச்சரிப்பு: ‘ஓ’ எனச்சொல்லும் போது நாக்கை (சிறிதளவு வெளியே) கீழுதட்டின் உள் விழிம்பில்    வைத்துக் கொண்டால்  எப்படிச்சப்தம் வருமோ அதுதான் அந்த உயிரெழுத்தின்  சப்தமாகும்.

சரி இதற்கும் மனைவிக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்கிறீர்களா...
சொல்கிறேன்.
நோர்வேஜிய மொழியில் 'KONE'  (‘கூனெ’) என்றால் மனைவி என்றர்த்தம்.
ஆங்கில அகரவரிசையில் ‘O’என்பதற்கு நோர்வேஜிய அகரவரிசையின் ஓசை ‘ஊ’ என்பதாகும் ஆனால் எழுத்து மாறாது.

ஆனால் உதரணமாக தமிழ் தெரியாத ஒருவர் ‘தமில்’ என்று சொன்னால் நாம் அதை தமிழ் என திருத்தி விளங்கிக்கொள்வதில்லையா...
அது போலத்தான் கடையிலிருந்தோரும், அந்த இளம்பெண்ணும் ‘கோனெ’ என்றதை ‘கூனெ’ என நினைத்து தலையைச் சொறிந்து கொண்டனர்.
அநேகமான தமிழர்கள், ‘ஹ’ என்பதற்கு பதிலாக ‘க’ என்றே உச்சரிப்பர்.
ஆக, நோர்வேஜிய மொழியை கற்காமல் கடைக்குச் செல்வோருக்கு  இப்படிப்பட்ட சங்கோஜமான, இடர்பாடான நேரங்கள் வரத்தான் செய்யும்...

“காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்...” என்றொரு மிக நல்ல பழைய தமிழ்ப்பாடல் உள்ளது...
இவர் கோழி வாங்கப் போய் ஒரு கொடுமையை வாங்கி வரவில்லை.
நோர்வே நாட்டவர்கள் அப்படிப்பட்டவரல்லர்...

ஆங்கிலம் தெரிந்திருந்தும், கோழி வாங்கப் போனவர்; கடையில் பெண் கேட்டாராம் என்றாகிறது.

No comments:

Post a Comment

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...