Wednesday 14 July 2010

மொழியும் நானும் -1- சீனி வாங்கப் போனவள்...

ஆங்கிலம் நடைமுறையில் இல்லாத ஒரு அந்நிய நாட்டுக்கு நாம் ஒருவரைத் திருமணம் செய்து சென்றோமானால்; முதலில் நடைமுறைத் தேவைகளுக்கு மொழியைத் தெரிந்து கொளவது அவசிமாகிறது.

நண்பர்கள் இருவர் பகிர்ந்து கொண்ட உண்மைச் சம்பவங்களே இதற்குச் சான்று.

இப்போது அனேகமாக எல்லா நாடுகளிலும் பல சரக்குக் கடைகள், நம் நாட்டுப் பெட்டிக்கடைகள் போலுள்ள மிகச் சிறிய கடைகள் எல்லாவற்றிலும்  நாமே கடைக்குள் சென்று, எமக்குத் தேவையான பொருட்களை எடுத்து வந்து விலை போடுவோரிடம் விலை போட்டு பணத்தைச் செலுத்தும்முறை வந்துவிட்டது.

இதற்கு இந்நாட்டு மொழியை நன்கு கற்றுத்தெரியவேண்டியதில்லை.  பொருட்கள் பொதி செய்யப்பட்டு, உரிய படங்கள், விளக்கங்கள்  போன்றவற்றை பொதி உறையில் அச்சிட்டு அடுக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் சில பொருட்களுக்கு உதவியை நாட வேண்டியது அவசியம்.

‘சீனி’(sugar)யையும் ‘உப்பு’(salt)வையும் ஒரு மொழி தெரியாதவர் - ஆங்கிலமேனும் தெரியாதவர் - கொள்வனவு செய்வது கடினம்.

இங்கே பிற நாடுகளிலிருந்து வருவோருக்கு மொழிக் கல்வியும் நடைமுறை வழக்கங்களும் முதலில் சொல்லிக் கொடுப்பார்கள்... மொழிக்கல்வி ஆகக் குறைந்தது 500 மணித்தியாலம் பயின்றேயாக வேண்டும். மொழிக்கல்வி பயின்றோருக்கு எந்த வித சிக்கலுமில்லை.

சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி எப்போதுமே உதவி செய்வார்.

‘அப்புறம் என்ன கடினம் என்று கேட்கிறீர்களா...?’
ஆம் அவர்களுக்கு ஒரு கடினமுமில்லைத்தான், ஆனால் அவர்கள் திருமணம் செய்து துணைவியரை அழைத்தால், அந்தத் துணைவியர் விரும்பினால் இந்நாட்டு மொழியைக் கற்றுக் கொள்ளலாம் என்றிருந்தது ஏறத் தாழ நான்கு ஐந்து வருடங்கள் வரையில். இன்று புதிதாக வரும் எல்லோருமே இந்நாட்டு மொழியைக் கட்டாயமாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படி விரும்பினால் இந்நாட்டு மொழியைக் கற்கலாம் என்றிருந்த காலத்தில் வந்த எமது தமிழ் பெணகளெல்லாம் மொழி கற்காமலேயே இருந்திருக்கிறார்கள்.

இனிப்பான ஒரு உதாரணம்:

ஒரு நண்பர் தனது புது மனைவிக்கு எல்லாவற்றையும் விளக்கமாகக் கூறிவிட்டு அவர் வேலைக்குச் சென்று விட்டார்.

- அநேகமானோருக்கு அவர்களது துணைவியர் தாமதமாகவே வந்து சேர்வர். இது குடிவரவு குடியல்வுத் திணைக்களங்களால் ஏற்படும் கால தாமதமாகும். ஆனால் திருமணம் செய்து அழைத்தவர்களோ ஒரு நாள் விடுமுறைகூட எடுக்க முடியாத நிலையிலிருப்பர்.

சந்தோஷமாகக் கழியும் நாட்களில் புது மணத்தம்பதிக்கு நடைமுறையிலுள்ள சிக்கல்கள் கண்ணுக்குப் புலப்படுமா..?! இல்லை!!-

வீட்டில் தனியே தமிழ் படம் (video tape) பார்த்துக் கொண்டிருந்த அந்தப் புதுப்பெண், தேநீர் தயாரிக்கலானார். நல்லவேளை அவளது புதுக் கணவர் கோப்பிப் பொடியும் (instant coffee. - not filter coffee -) தேயிலையும் (tea leaves - not tea bags-) வாங்கி வைத்திருந்தார். ஆனால் சீனியிருக்கும் ஒரு சாடியுள் சீனி இருக்கவில்லை. சீனி தீர்ந்து விட்டது அல்லது சீனி முடிந்து விட்டது. புதுப் பெண்ணுக்கு அவளது கணவர் எற்கனவே அவர்கள் குடியிருந்த அடுக்குமாடி வீடுகளின் நிலத்தளத்திலுள்ள கடைகளைக் காட்டியுள்ளார். மனத் தெம்புடன் கடைக்குச் சென்றாள் அந்தப் புதுப் பெண்.

கடைக்குள் ஒவ்வொரு அடுக்குகளாகத் தேடிக் கடைசியில் ஓர் அடுக்கில் ஒரு பெட்டியை எடுத்து குலுக்கிப் பார்த்தபோது, (சீனிப் பொதி இறுக்கமாக இருக்கும் குலுங்காது) அது சீனிச் சரையில் சீனி சரசரப்பது போல இருந்தது அந்தப் புதுப் பெண்ணுக்கு.
சீனி தின்ற குழந்தையைப் போலொரு சந்தோஷத்தோடு பணத்தைக் கொடுத்து மிகுதியையும் வாங்கிக் கொண்டு ஒரே ஓட்டமாக வீடு வந்து சேர்ந்தாள்.

ஒரு நிமிடங்கூட தாமதிக்காது பெட்டியை பிரித்து உள்ளே தேநீர்க் கரண்டியை நுழைத்து இரண்டு கரண்டிக்குப் பதில் மூன்று கரண்டி சீனிப்பழிங்குகளை தேநீருள் போடடு கலக்கிக் கொண்டு ‘அப்பாடா’ என தொலைக்காட்சிப் பெட்டிக்கு எதிரே அமர்ந்தாள்.

சந்திரனில் முதன்முதலில் காலடியெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ரோங் (Neil Armstrong) இற்கு அப்படியொரு சந்தோஷம், உற்சாகம், மன நிறைவு, பெருமிதம் இருந்ததோ இல்லையோ அவளுக்கு இருந்தது.

தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த தமிழ்ப்படத்தைப் பார்த்துக்கொண்டே தேநீர்க் கோப்பையை வாயில் வைத்து  ஒருதரம் உறிஞ்சி சுவைத்தாள்.

வாய்க்குள் வந்த தேநீரை வெளியே உடனே துப்பவேண்டும் போலிருந்தது. ஓடிச்சென்று குளியலறையில் துப்பி வாயைக் குளிர் நீரால் கொப்பளித்துவிட்டு வந்தாள். தேநீர் ஒரே உப்பாக இருந்தது அவளுக்கு. அவளால் நம்ப முடியவில்லை...

சமையலறையில் தான் வாங்கிவந்த அந்தச் சீனிப் பெட்டியில் ஒரு சிட்டிகை எடுத்து வாயில்ப்போட்டுப்பார்த்தாள். அதுவும் உப்புச் சுவையைத் தந்தது. மீண்டும் ஒரு சிட்டிகை எடுத்து வாயில்ப் போட்டுச் சுவைத்துப்பார்த்தாள். எத்தனை தடவை ஒரே பெட்டியிலிருந்து எடுத்துச் சுவைத்தாலும் உப்பு சீனியாகுமா...? அதன் பின்னர்தான் அவள் உணர்ந்தாள் தான் வாங்கிவந்தது சீனியல்ல, உப்பு என.

பின்னர்தான் அவள் அந்தப் பெட்டியில் எழுதியிருந்ததைப் பார்த்தாள் அது ஆங்கிலமாகவே இருந்தது, உப்பு என எழுதியிருந்தது.

பின்னர் புதுக் கணவரின் புத்தக அடுக்கில் இருந்த ஆங்கிலம் - நோர்வேஜியன் மொழி அகரதியில் சீனிக்கு என்ன எழுதியிருக்கிறார்கள் எனப்பார்த்து (sukker) அதை அப்படியே ஒரு சீட்டில் எழுதி எடுத்துக் கொண்டு சென்று கடையில் சீனியை வாங்கி வந்தாள்.

முதலில் ஒரு சிட்டிகை வாயில்ப் போட்டுப்பார்த்து அது சீனிதான் என உறுதி செய்த பின் தேநீரில் போட்டுக் குடித்தாளாம்.

கணவர் வந்ததும் அதைச் சொல்லி அவள் சிரித்தாள், ஆனால் அவளது கணவர் தான் செய்த தவறை யோசித்து உடனேயே தன் புது மனைவிக்கு இந்நாட்டு மொழி கற்பித்தாராம்.

‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பர் ஆனால் தேநீருக்குச் சீனிதானே சுவை சேர்க்கும்

No comments:

Post a Comment

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...