Saturday 8 May 2010

தங்கமீன்கள்...


இந்தத் தங்க மீன்களுக்கு இன்று வயது நான்கு மாதங்கள் ஆகின்றன...

2009ம் ஆண்டு மார்கழி மாதம் 31ம் திகதி இரவு ஏறத் தாழ எட்டு மணிக்கு, இந்தத் தங்க மீன்களின் தாய் முட்டைகளை இடத்தொடங்கியது...
அந்த நேரம் வாணவேடிக்கைகளை பார்ப்பதற்காக வெளியே செல்ல ஆயத்தமான நான்...
உடனேயே அந்த முட்டைகளை அப்புறப்படுத்தத் தொடங்கினேன்.
நான்கு முதல் ஐந்து மணிநேரம் தொடர்ச்சியாக முட்டைகளை வேறொரு தொட்டியில்ச் சேர்த்து பெற்றோரும் மற்றோரும் முடிந்தளவு முட்டைகளை உண்ணாதவாறு செய்து கொண்டிருந்தேன்.
இருந்தாலும் முடிந்தவரை அந்தத் தொட்டியில் இருந்த அனைத்து மீன்களும் அந்தத் தங்க மீன் முட்டைகளை உண்டு இறுதியில்க் களைத்திருந்தன...

புது வருடம் பிறந்து கொண்டிருக்கும் வேளை, இவை முட்டை இடாதா என மூன்று வருடங்களாக அங்கலாய்த்த எனக்கு, எண்ணிலடங்காத அளவுக்கு முட்டைகளைத் தந்து என்னை சந்தோஷத்திலாழ்த்தின அந்தத் தங்க மீன்கள்.

மூன்று வருடங்களாக அமைதியாக என்னுடன் வாழ்ந்து வந்த அந்தத் தங்க மீன்களுக்குள் ஏதோ ஒன்று உந்த அவை காதல் வசப்பட்டு, என்னையும் பரவசத்திலாழ்த்தின...

ஆனால் அந்தச் சந்தோஷம், அந்தப் பரவசம் நிலைக்கக் கூடாதென விதி நினைத்தது.

முட்டை உண்ட களைப்பில் மீன்கள் ஒதுங்கி இருக்கின்றன என்றே நினைத்துப் படுக்கைக்குச் சென்றேன்... ”உண்ட களை தொண்டர்க்கும் உண்டு” என்பார்களே அதுபோல...

ஆனால் அடுத்த நாளும் தங்க மீன் முட்டை உண்ட அத்தனை மீன்களும் மந்த நிலையிலேயே இருந்தன...
நானும் பார்த்துக் கொண்டே இருந்தேன்... ஓராம் திகதி இரவு அந்த அகோரம் நிகழ்ந்தது...
தங்க மீன் முட்டைகளை அளவுக்கதிகமாக உண்ட அனைத்து மீன்களும் - இன்று நான்கு மாத நிறைவைக் கொண்டாடும் இந்த தங்கமீன்களின் பெற்றோரும் உட்பட- மெல்ல அசைவின்றி மிதக்கத் தொடங்கின...
சில மணித் துளிகளில் அனைத்து மீன்களும் இயக்கமில்லாத சடமாக மிதந்து நீரினசைவுடன் அசைந்து கொண்டிருந்தன...
மீன் முட்டைகளை உண்டால் (அளவுக்கதிகமாக) மீன்கள் சாகுமா என்ற கேள்வி மனதைக் குடைந்தெடுத்தது.

இந்த மீன்களின் பெற்றோர் மிகவும் வளர்ந்த மீன்கள், வழமையான இறுதி யாத்திரைக்கு அவை பொருத்தமில்லை. அதாவது கழிவறையில் கழிவாசன (commode) வழியாக அப்புறப்படுத்துவது... 

அதில் சங்கடமென்ன வெனில் கழிவாசனத்தில் உள்ள துளையிலும் பார்க்க பெரியவை எனது தங்கமீன்கள். அதைவிட கழிவாசன இறுதியில் இரண்டு வளைவுகள் உள்ளன. அந்த வளைவுகளிலும் பார்க்க நீளமானவை எனது தங்கமீன்கள். ஆக, கழிவறை இறுதி யாத்திரைக்கு நான் அவற்றைத் தயார் படுத்த வேண்டும், அதாவது துண்டங்களாக வெட்ட வேண்டும்.

நான் கொடுத்த எதையும் ஆகாரமென உண்டு, நான் உறங்கும் போது உறங்கி, நான் கண் விழிக்கும் வேளை அவையும் கண் விழித்து, நான் வேலையிலிருந்து வீடு திரும்பும் போது ஆவலோடு தொட்டிக் கண்ணாடி அருகே வந்து என்னைப் பார்த்து கண் சிமிட்டி என்னைப் பரவசப்படுத்திய அந்தத் தங்கமீன்களை நானே கூறு போடுவதா.... நினைக்கவே மனம் தாங்கமுடியவில்லை.

ஆகவே உரிய முறையில் அவற்றுக்கு எனது வீட்டின் பின்புறமுள்ள புற்றரையில் ஒரு கிடங்கு வெட்டி அந்த மூன்று தங்கமீன்களையும் அவற்றோடு போட்டி போட்டுக் கொண்டு தங்கமீன் முட்டைகளை உண்டு உயிர் நீத்த எனைய மீன்களையும் (ஐந்து வாள் வால்மீன்கள் (sword tail fish)) சேர்த்து அடக்கம் செய்து விட்டு தங்கமீன் முட்டைகளை நோட்டம் விட ஆரம்பித்தேன்.

நான்கு ஐந்து நாட்களாக எந்தவொரு அசைவுமிருக்கவில்லை. ஆனால் ஆறாவது நாள் ஒரு சிறு அசைவைப் பார்த்தேன். இதோ இவைதான் நான் பார்த்த முதல் மூன்று தங்கமீன் குஞ்சுகள்...
அடுத்தநாள் எண்ணுக்கடங்காத அளவு தங்கமீன் குஞ்சுகளின் அசைவு, என்னை விட்டுப் போன சந்தோஷத்தை மீளக் கொணர்ந்தன...



இவைதான் மூன்று வருடங்களாக என்னுடன் வாழ்ந்த நான்கு தங்கமீன்களும்...
இவற்றில் ஒரு பெண் தங்கமீன் இன்றும் என்னுடன் வாழ்ந்து வருகிறது...

கறுப்பும் மஞ்சளுமாக கர்வமாக நீந்திச் செல்கிறதே... அந்த மீன்தான் தாய்... 
எமது தமிழ்ப் பெண்களுக்கு இருக்குமே ஒரு கர்வம், அது போல எப்போதும் அந்தத் தங்கமீனிடம் ஒரு கர்வத்தை பார்க்கலாம்...
இதற்கு மேலே உள்ள படத்தில் சிவந்த நிறத்தில் உடலும் அகங்காரமான வெண்ணிறவாலும கொண்டிருக்கிறதே... அதுதான் தந்தை...

மேலே உள்ள படத்தை (auch missed என எழுதியிருக்கும் படம்) எடுப்பதற்கு முன் அவையிரண்டும் ஓடிப்பிடித்து... இல்லை இல்லை நீந்தித் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தன. சிறிது நேரம் நான் தூர இருந்து பார்த்து இரசித்துக் கொண்டிருந்தேன். பின்னர் சில படங்களை எடுக்கும் போது, அவை ஒன்றுக்கொன்று முத்தங் கொடுப்பது போல இருந்தது. அந்த முத்தக் காட்சி படமாகப் பதிவு செய்ய நானும் இயன்றளவு முயற்சி செய்தேன். ஆனால் கிடைத்தது இந்தப் படம்தான். அதனால்த்தான் படத்திலேயே (Auch missed) என எழுதி வைத்தேன்.

கல்லுக்குள்ளும் ஈரம் என்பது போல துக்கத்திலும் ஒரு சந்தோஷம் என அவைகளின் வாரிசுகளை அந்தத் தங்கமீன்களின் நினைவுகளோடு பார்த்துப் பராமரித்து வருகிறேன்.

No comments:

Post a Comment

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...